நாக்பூர்: இந்துத்துவா நாட்டின் 5,000 ஆண்டு கால தொன்மை, பண்பாட்டிலிருந்து பெறப்பட்டது என்பதையும் அவர் குறிப்பிடுகிறார். மகாராஷ்டிராவில் நடைபெற்ற 'இந்துத்துவா மற்றும் நாட்டின் ஒருமைப்பாடு' என்ற நிகழ்வின்போது பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், "சமத்துவம், சகோதரத்துவம், நீதி, சுதந்திரம், சமூக நீதி, ஒருமைப்பாடு போன்ற அரசியலமைப்பின் முகப்பாக இந்துத்துவா திகழ்கிறது" என விவரித்தார்.
ஊடக நிறுவனம் ஒன்றின் பொன்விழாவில் கலந்துகொண்டு பேசியபோது இவ்வாறு மோகன் பகவத் விளக்குகிறார். மேலும் அவர் கூறுகையில், "நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் பாரதத் தாயின் தவப்புதல்வர்கள். வந்தே மாதரம் அனைவரையும் ஒருங்கிணைக்கிறது.
மதச்சார்பின்மைக்குக் காரணம் இந்துத்துவா
நாம் அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும், இந்துக்களாகிய நம்மை இணைப்பது இந்துத்துவா. தவறுகளையெல்லாம் மறந்து வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நிலைநாட்ட வேண்டும். அனைத்தையும் உள்ளடக்கிய உண்மையைத்தான் இந்துத்துவா என்று நாம் அழைக்கின்றோம், இது நமது நாட்டின் அடையாளம். நாம் மதச்சார்பின்மை பற்றி பேசுகிறோம்.
ஆனால் அது பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது, அரசியலமைப்பை உருவாக்குவதற்கு முன்பும் இருந்தது; அதற்குக் காரணம் இந்துத்துவா" என்றார். தொன்மைக் காலங்களில் வேற்றுமையில் ஒற்றுமை என்ற எண்ணம் இந்தியப் பண்பாட்டின் பாதை என்றும், இந்தியப் பண்பாட்டின் அடையாளம் இந்துத்துவாவால் வரையறுக்கப்படுகிறது எனவும் பகவத் குறிப்பிடுகிறார்.
மேலும் அவர், "ஒற்றுமையுடன் இருக்க சீரான தன்மை தேவை என்று நினைக்கிறது உலகம், ஆனால் நம் நாட்டில் வேற்றுமையில் ஒற்றுமை எண்ணம் பழங்காலத்திலிருந்தே இருந்துவருகிறது. இந்துத்துவா என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியது சீக்கிய மதத் தலைவர் குருநானக் தேவ்தான்; அவர் (ராகுல் காந்தி) சொல்வதுபோல் வீர சாவர்க்கர் அல்ல.
இந்து என்பது வாழ்வியல் முறை
நம் நாட்டில் இந்து என்பது மக்களின் வாழ்வியல் முறையாகும். காலத்திற்கு தகுந்தாற்போல் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும், எந்த மதச் சடங்குகளையும் எதிர்க்கக் கூடாது" என்றார் விளக்கமாக.
இதையும் படிங்க: #BoycottHyundai: பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஹுண்டாய் கருத்து - இந்தியர்கள் கடும் எதிர்ப்பு