சிம்லா: ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், லாஹுவால் பகுதியில் உள்ள கிராம்பு கிராமம் மற்றும் சோட்டா தர்ரா மற்றும் ஸ்பிதி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 9ஆம் தேதி) அதிகாலையில் பெய்த கனமழையால், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. எனினும், இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
கிராம்பு முதல் சோட்டா தர்ரா பகுதி வரையிலான AEC BRO 94 RCC, NH 505 (சும்டோ கஜா கிராம்பு) வரையிலான பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கின் காரணமாக, நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளதாக, லாஹவுல் ஸ்பிட்டி மாவட்ட அவசரகால செயல்பாட்டு மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலச்சரிவில் சிக்கிய 30 கல்லூரி மாணவர்கள், துரிதச் செயல்பாட்டின் அடிப்படையில் மீட்கப்பட்டதாக, ஹிமாச்சலப் பிரதேச மாநில அவசரகால செயல்பாட்டு மையம் (HPSEOC) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
"ஸ்பிட்டியில் இருந்து மணாலிக்கு இரண்டு பேருந்துகளில் சென்ற 30 கல்லூரி மாணவர்கள் , சாலையில் ஏற்பட்டு இருந்த நிலச்சரிவு பாதிப்பில் சிக்கிக் கொண்டனர். மீட்புப் படையினர் துரிதமாக செயல்பட்டு, அனைத்து மாணவர்களையும் பத்திரமாக மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். வானிலை மேம்பட்ட நிலையில், நிலச்சரிவு இடிபாடுகள் அகற்றப்பட்டன.
ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் மண்டி மற்றும் குலு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதன் எதிரொலியாக, பியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மண்டியில் இருந்து குலு நோக்கிய தேசிய நெடுஞ்சாலை 3ல் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளதன் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், சிம்லா-கல்கா பாரம்பரிய ரயில் பாதையில் தொடரும் கனமழை மற்றும் அடுத்தடுத்த நிலச்சரிவு பாதிப்பு காரணமாக, இன்று (ஜூலை 9) ரயில் இயக்கம் ரத்து செய்யப்படுவதாக,'' அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். குழு பாண்டோவின் கீழ் சந்தையில் பியாஸ் ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அப்பகுதியை ஒட்டி உள்ள வீடுகளில் சிக்கியிருந்த ஆறு பேரை, மாநில பேரிடர் மீட்புப் படையினர் (SDRF), ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பத்திரமாக மீட்டு உள்ளனர்.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) சனிக்கிழமை ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஏழு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்து இருந்தது. ஜூலை 8 மற்றும் 9ஆம் தேதிகளில் மிக அதிக மழை பெய்யும் என்று எச்சரித்து இருந்த நிலையில், இந்த மாவட்டங்களில் ஒரே நாளில் 204 மி.மீ. மழை பெய்யக்கூடும் என்று கணித்து உள்ளது.
ஜூலை 8 மற்றும் 9ஆம் தேதிகளில் சம்பா, காங்க்ரா, குலு, மண்டி, உனா, ஹமிர்பூர் மற்றும் பிலாஸ்பூர் மாவட்டங்களில் மிகக் கடுமையான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், வெள்ளம் மற்றும் நிலச்சரிவை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு, அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்.
இதையும் படிங்க: மோடி மீண்டும் பிரதமராக கூடாது - சுப்பிரமணியன் சுவாமி பேச்சு