நாடு முழுவதும் பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. ஏற்கெனவே கரோனா சூழல் காரணமாக பொருளாதாரச் சிக்கலால் கடும் சிரமங்களை சந்தித்து வரும் மக்கள், இந்த விலை ஏற்றத்தை உடனடியாகக் குறைக்க வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு தாலிபான்கன் தான் காரணம் என பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லாத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோலும் தாலிபான்களும்
இதுகுறித்து அவர் கூறுகையில், "ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதன் காரணமாக, விநியோக சிக்கல் ஏற்பட்டு சர்வதேசச் சந்தையில் எரிபொருள், எரிவாயு விலைகள் அதிகரித்துள்ளன. வாக்காளர்களுக்கு இது நிச்சயம் தெரியும்" எனக் கூறினார்.
பெட்ரோல் வேணுமா... ஆப்கானிஸ்தான் போ!
முன்னதாக, ஆகஸ்ட் 19ஆம் தேதி பேசிய மத்தியப் பிரதேச பாஜக நிர்வாகி ராம் ரத்தன், குறைந்த விலையில் பெட்ரோல் தேவைப்படுபவர்கள் ஆப்கானிஸ்தான் செல்லலாம் என சர்ச்சைக் கருத்தை முன்வைத்தது நினைவுகூரத்தக்கது.
எரிபொருளுக்கும் ஆப்கானுக்கும் என்ன தொடர்பு ?
பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு தொடக்கம் முதலே ஆப்கானை பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால், இந்தியாவுக்கு எரிபொருள் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் இடம்பெறவில்லை என்பதே உண்மை.
ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நைஜீரியா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் இருந்து மட்டுமே கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்கிறது. எனவே ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல் இந்தியாவில் எரிபொருள் விலையை பாதிக்க வாய்ப்பில்லை.
ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு, இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான வர்த்தகம் பாதிக்கப்பட்டாலும், எரிபொருள் விஷயத்தில் இருநாடுகளுக்கு இடையே எந்த உறவும் இதுவரை இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உலக தலைவர்களை மிஞ்சிய மோடி... மக்கள் ஆதரவில் டாப்!