உடுப்பி : கர்நாடக அரசின் கீழ் இயங்கும் கல்வி நிலையங்களில் ஹிஜாப் போன்ற மத அடையாளங்களை வெளிப்படுத்தும் உடைகளுக்கு அனுமதியில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹிஜாப், காவித் துண்டு உள்ளிட்டவை அணிந்துவர தடைவிதிக்கப்பட்டுள்ளது. உடுப்பியில் உள்ள பள்ளிகளில் ஹிஜாப் அணிவது இஸ்லாமியர்களின் உரிமை என்றால் காவித்துண்டு அணிவது தங்கள் உரிமை எனக்கூறி இந்து மாணவர்கள் காவித்துண்டு அணிந்து வந்தனர்.
சிக்மங்களூருவிலும் ஒரு பள்ளியில் இதே போன்று போராட்டம் நடத்தப்பட்டது. ஹிஜாப் அணிந்த மாணவிகளை கல்லூரி நிர்வாகம், கல்லூரிக்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி வாயிற்கதவை மூடும் காணொலி காட்சிகளும் இணையத்தில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன.
இதையடுத்து, பெங்களூருவில் ஹிஜாப்-காவி துண்டு தொடர்பான போராட்டங்களை தவிர்க்க, பெங்களூருவில் உள்ள ப கல்வி நிறுவனங்களை சுற்றி 200 மீட்டருக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னை கர்நாடகாவில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ஹிஜாப் அல்லது காவித்துண்டு என எந்த வித மத அடையாளங்களையும் வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வரக்கூடாது என நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இதைத்தொடர்ந்து 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், பள்ளிகளை மீண்டும் திறக்க முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கர்நாடகத்தில் இன்று முதல் 10 ஆம் வகுப்பு வரையி பள்ளிகள் திறக்கப்பட்டது.
இதையும் படிங்க : லீக்கான வினாத்தாள் விவகாரம்: விசாரணை தொடக்கம்