புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்திற்குச் செல்ல, அரசு இடத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்து உள்ளதாகவும், அரசுப் புறம்போக்கு நிலத்தின் சில பகுதிகள் மைதானத்துக்குள் அமைந்துள்ளதாகக் கூறி, மைதானத்துக்கு மின், குடிநீர் இணைப்பைத் துண்டிக்கவும், மைதானத்திற்குச் சீல்வைக்கவும் புதுச்சேரி அரசு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸை எதிர்த்து புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்தின் சார்பிலும், மைதானத்திற்கு நிலத்தை குத்தகைக்கு கொடுத்த தனியார் நிறுவனத்தின் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல்செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (டிச. 02) விசாரணைக்கு வந்தபோது, அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மைதானத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவில், 'சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளது குறித்து நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
புகார் மீதான விசாரணை முடிவதற்கு முன்பே ஆளுநர் தன் உத்தரவில், 'சட்டவிரோத நடவடிக்கைகள்' என நேரடியாக எப்படி முடிவுக்கு வர முடியும் என்றும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
அரசியல் சாசன பதவி வகிக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு எதிராக, ஏற்கனவே உயர் நீதிமன்றம் கருத்துகள் தெரிவித்திருந்தும் அவர் எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
புகார் மீதான விசாரணை தொடங்கும் முன்பே 'சட்டவிரோத நடவடிக்கைகள்' எனத் துணைநிலை ஆளுநர் முடிவுக்கு வந்துவிட்டால், அதன்பின்னர் புகார் குறித்து விசாரிக்கும் அலுவலர்கள் என்ன முடிவுக்கு வருவார்கள் என்பதை யூகிக்க முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண துணைநிலை ஆளுநர் ஆர்வம்காட்டுவது குறித்து பாராட்டுத் தெரிவித்த நீதிபதிகள், அரசியல் சாசனம் 226ஆவது பிரிவின்கீழ் நீதிமன்றத்திற்கு வரம்பில்லாத அதிகாரம் இருந்தாலும்கூட நீதிமன்றம் கட்டுப்பாட்டுடன் செயல்படுவதைப்போல ஆளுநரும் செயல்பட வேண்டும் என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
பின்னர், இந்த வழக்குத் தொடர்பாக பதிலளிக்கும்படி புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், புதுச்சேரி அரசு அனுப்பிய நோட்டீசுக்கு டிசம்பர் 21ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்திற்கும், தனியார் நிறுவனத்திற்கும் உத்தரவிட்டனர்.
மேலும், இரு தரப்பினரையும் அழைத்து விசாரிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் இறுதி உத்தரவு எதுவும் பிறப்பிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தி, வழக்கின் விசாரணையை ஜனவரி 6ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.