ராய்ப்பூர்(சத்தீஸ்கர்): “இதை செய்தால் இது கொடுப்பேன்”என்ற வாக்கியத்தை சிறு வயதிலிருந்து கேட்காதோர் யாரும் இல்லை. படித்து மார்க் வாங்க வேண்டும் அதுவும் கூடுதலாக மதிப்பெண்கள் பெறவில்லை என்றால் அதுக்கும் ஒரு போராட்டம் என பல்வேறு போராட்டங்களுடன் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் நிலை ஒரு கத்தியின் முனையில் இருப்பது போல தான்.
இது ஒருபுறம் இருக்க மாணவர்களின் படிப்பு ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக, ஒவ்வொரு கல்வியாண்டிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெரும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்குத் தனி ஹெலிகாப்டர் பயணம் ஏற்பாடு செய்யப்படும் என அம்மாநில முதல்வர் பூபேஷ் பாஹல் அறிவித்து இருந்தார்.
அந்த வகையில் இந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதி முடித்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை குஷிபடுத்தும் விதமாக சத்தீஸ்கர் மாநில அரசு, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஹெலிகாப்டர் பயணத்தை இந்த ஆண்டும் வெற்றிகரமாகச் செயல்படுத்தி உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்காக மாநிலம் முழுவதும் இருந்து 78 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், அம்மாநிலக் கல்வி அமைச்சர் பிரேம்சாய் சிங் கொடியசைத்து மாணவர்களின் ஹெலிகாப்டர் பயணத்தை தொடங்கி வைத்தார். பயணத்தின் போது மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாணவர்களுக்கு முன்னதாகவே அறிவுரைகள் வழங்கப்பட்டன.
10 மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வில் முன்னிலையில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஹெலிகாப்டர் பயணம் மட்டுமின்றி அவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களுடன் ஊக்கத்தொகையும் வழங்கி அம்மாநில அரசு அவர்களை கௌரவப்படுத்தி உள்ளது.
மாணவர்களின் ஹெலிகாப்டர் பயணத்திற்கு பிறகு மாணவர்களை சந்திக்கவிருக்கும் மாநில முதல்வர் பூபேஷ் பாஹல், ஸ்வாமி ஆத்மானந்த் சத்ர ப்ரோட்சஹன் யோஜனா திட்டத்தின் கீழ் அம்மாணவர்களை பாராட்டி, அவர்களுக்கான சான்றிதழ்களும் பிரதிபா சம்மான் விழாவின் மூலம் அம்மாணவர்களுக்கு 1.5 லட்சம் ரூபாயை ஊக்கதொகையாக வழங்க உள்ளார்.
நடப்பு கல்வியாண்டில் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற 10 ஆம் வகுப்பு மாணவர்களில் 48 பேரும் 12 ஆம் வகுப்பில் 30 பேரும் என மாநிலம் முழுவதும் இருந்து மொத்தம் 78 பேர் தேர்வாகி உள்ளனர். 10 வது முடித்தால் ஜாலியாக இருக்கலாம் 12 வது முடித்தால் ஜாலியாக இருக்கலாம் என பலர் கூற கேட்டிருப்போம். அதனை வெற்றிகரமாக செயல்படுத்தி சாதித்த மாணவர்களை கவுரவப்படுத்தும் சத்தீஸ்கர் மாநிலத்தின் இந்தத் திட்டம் பலர் மத்தியில் வரவேற்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கண்டக்டர் அவதாரமெடுக்கும் சித்தராமையா! பெண்களுக்கான இலவச பயண திட்டத்தை தொடங்கி வைக்கிறார்...