திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இடைவிடாது பெய்து வரும் மழையால், கல்லார்குட்டி, பொன்முடி, குண்டலா, கீழ் பெரியாறு, இரட்டையாறு அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆலுவா சிவன் கோவில் முழுவதும் நீரில் மூழ்கியது.
தொடர் மழை காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று(ஆகஸ்ட் 2) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை, வெள்ளம் காரணமாக கேரளாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கோயிலில் மின்னல் தாக்கியதில் 25 பக்தர்கள் காயம்!