ஆந்திரா: திருமலை - திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சொந்தமான கோவிந்தராஜசுவாமி சத்திரம், ஸ்ரீனிவாசம், பூதேவி ஆகிய மூன்று வளாகங்களில் சர்வ தரிசன டோக்கன் இன்று (ஏப். 12) வழங்கப்பட்டது. டோக்கன் இரண்டு நாள்களாக கொடுக்கப்படாமல், இன்று விநியோகிக்கப்பட்டதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மேலும், டோக்கன் வாங்க பக்தர்களும் முண்டியத்ததால், மூன்று வளாகங்களிலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி மூன்று பக்தர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மூவரையும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீவாரி தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் கீழ் திருப்பதியில் குவிந்துள்ள நிலையில், தாங்கள் வந்து மூன்று, நான்கு நாள்கள் ஆகியும் இதுவரை டோக்கன் விநியோகிக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளனர். சிறு குழந்தைகளும் இருக்கும் சூழலில், உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளின்றி மிகவும் சிரமப்படுவதாகவும் தெரிவித்தனர்.
டோக்கன் வழங்காததால், மலையேற முடியவில்லை என பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். திருமலைக்கு அனுமதித்தால் குறைந்தபட்சம் வேண்டுதல்படி, மொட்டை அடித்து சுவாமிக்கு முடியை சமர்ப்பணமாவது செய்வோம் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். பல ஆண்டுகளாக, ஸ்ரீவாரி தரிசனத்திற்கு வருவதாகவும், இதுபோன்ற நிலையை இதுவரை பார்த்ததில்லை என்றும் பக்தர்கள் கொந்தளிக்கின்றனர்.
மேலும், ஈடிவி பாரத்தின் செய்தி எதிரொலியாக, நம்மிடம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அலுவலர்கள் தெரிவித்ததாவது, "டோக்கன் இல்லாமலும் பக்தர்கள் மொட்டை போட அனுமதிக்கப்படுகிறார்கள்" என்றனர். மேலும், திருமலை - திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகி உள்ளதால், நாளை முதல் (ஏப். 13) அடுத்த ஐந்து நாள்களுக்கு பிரேக் தரிசனம் எனும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: எமனாக வந்த ரயில்; ஸ்ரீகாகுளம் தண்டவாளத்தில் ஐவர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?