டெல்லி: நாடாளுமன்றத்தின் மக்களவையில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பல்வேறு நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், மாநில அரசுகள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம் என அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால், பொது இடங்களில் மக்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, அடிக்கடி கைகளை கழுவுவது, கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கைகளை தூய்மைப்படுத்துவது குறித்து மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென அறிவுறுத்தினார்.
உலக அளவில் நாளொன்றுக்கு 5.87 லட்சம் கரோனா வழக்குகள் பதிவாகி வரும் வேளையில், இந்தியாவில் 153 என்ற அளவில் இருப்பதாக அவர் தெரிவித்தார். அடுத்தடுத்து வரும் பண்டிகை காலங்களில் கரோனா பரவாமல் இருக்க மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டார்.
கரோனா பரவலைத் தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும், தேவைக்கேற்ப கட்டுப்பாடுகளை விதித்து பரவலை கட்டுப்படுத்தவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக அவர் கூறினார். புதிய வகை கரோனா மாறுபாடுகள் இருந்தால் அதை விரைவாக கண்டறிந்து மரபணு பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை கண்டறிந்தும், முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்திக் கொள்வது குறித்து பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் ஆர்டிபிசிஆர் மாதிரிகளை சேகரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாஸ்க் கட்டாயமா? - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா சொன்னது இதுதான்