பணியிடங்களில் பெண்களுக்கு தேவையான வசதிகளை செய்துதர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என முற்போக்கு பெண்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், வழக்குரைஞருமான பூனம் கெளசிக் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவில், "இந்திய அரசியலமைப்பின் 15 (3)ஆவது பிரிவின்படி, பெண்களுக்கு தேவையான வசதிகளை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகளிடம் தனி வசதிகளை பெற வேண்டும் என்பது அவர்களுடைய சட்டப்படியான உரிமை. ஆனால், அரசுகள் அத்தகைய வசதிகளை வழங்கவில்லை.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு துறைகளில் பெண்கள் கணிசமான அளவில் பணியாற்றி வருகின்றனர். உடற்சார் உழைப்பு, அறிவுசார் பங்களிப்பு என அவர்களின் பங்கேற்பு உள்ளது. கடைநிலை தொழிலாளர்களில் தொடங்கி அலுவலக உயர் பதவிகள் என ஒவ்வொரு துறையிலும் பெண்கள் நிரந்தர ஊழியராகவோ, தற்காலிக ஒப்பந்த பணியாளராகவோ உழைப்பை வழங்கி வருகின்றனர்.
குறிப்பாக, அமைப்புசாரா துறைகளில் தொழிலாளர் சட்டங்கள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. அதிலும், பெண்கள் தொடர்பான நீதிமன்ற அறிவுறுத்தல்கள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை. பெண்கள் மாதத்திற்கு நான்கு முதல் ஆறு நாள்கள் மாதவிடாய் வலியை அனுபவித்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு அதனை எதிர்க்கொள்ளும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை.
மாதவிடாய் காலத்தில், விலையில்லா சுத்தமான கழிப்பறைகளும், சுகாதாரத்தைப் பேண உதவும் நாப்கின்களும் எளிய அணுகலில் பெண்களுக்கு கிடைக்க வேண்டும். டெல்லி போன்ற நகரங்களில் பணியாற்றும் பெண்களுக்கு பொது கழிப்பறைகளில் சிறப்பு வசதிகள் செய்து தரப்பட வேண்டும். கழிப்பறைகளில் விலையில்லா சுகாதார நாப்கின்கள் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட வேண்டும். சிரமத்திற்குள்ளாகும் பெண்கள் இதன் மூலமாக எளிதாக பயன் அடையலாம்.
உழைக்கும் பெண்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்புகள் வழங்கப்பட வேண்டும். மாதவிடாய் என்பது பெண்களின் உடலுக்குள் நிகழும் உயிரியல் மாற்றம். அந்த நேரத்தில் பெண்களுக்கு ஓய்வு தேவைப்படும். உடல் நலனில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். பணி என்கிற பெயரில் அந்த நேரத்தில் அவர்கள் மீது தொடரும் சித்திரவதை ஒழிக்கப்பட வேண்டும்.
அப்போது, பெண்களுக்கு ஊதிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். இது பெண்களை தன்னம்பிக்கை கொள்ள வைக்கும். அவர்களின் பொருளாதார வலுவூட்டலிலும் ஒரு முக்கியமான படியாக இருக்கும். எனவே, இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த மனு, டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். படேல் தலைமையிலான அமர்வுக்கு முன்பாக இன்று (நவம்பர் 24) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ராஜீவ் அகர்வால், “மத்திய அரசு, டெல்லி யூனியன் பிரதேச அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருப்பதால் பெண்களின் உரிமைகளைக் காக்க நீதிமன்றம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.
இதனையடுத்து டெல்லி உயர் நீதிமன்றம், “மாதவிடாய் காலங்களிலும், மெனோபாஸ் நேரத்திலும் பெண்கள் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் சூழல் இன்றும் தொடர்கிறது. இந்த பிரச்னையை இதுவரை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன.
இந்த வகையான சித்திரவதை ஒழிக்கப்பட வேண்டும் என்று பெண்கள் அமைப்புகள் கூறுவதை நாம் புறம்தள்ள முடியாது. சமுதாயமும், அரசும் பெண்களில் நலன் மற்றும் உரிமைகள் மீது அக்கரை செலுத்த வேண்டும். மேலும், ஆக்கப்பூர்வமான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும். டெல்லி மற்றும் மத்திய அரசுகள் இந்த கோரிக்கையை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்” என அறிவுறுத்தி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
இதையும் படிங்க : ”இவர்தான் புதிய ஜின்னாவா...” - விமர்சித்த பாஜக இளைஞரணித் தலைவர்