குருசேத்திரா: காலிஸ்தான் தனி நாடு கோரி தீவிர பரப்புரை மேற்கொண்டு வரும் அம்ரித்பால் சிங்கை கைது செய்ய பஞ்சாப் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை போலீசார் அவரை நெருங்கிய நிலையில், நூலிழையில் தப்பினார். அதன்பின் தலைமறைவாகி உள்ள அம்ரித்பால் சிங்கை கைது செய்யும் நடவடிக்கையை பஞ்சாப் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் ஹரியானா மாநிலம், குருசேத்திராவில் உள்ள வீட்டில், அம்ரித்பால் மற்றும் அவரது உதவியாளர் பபல்ப்ரீத் சிங் ஆகியோர் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அம்ரித்பால் சிங்குக்கு அடைக்கலம் கொடுத்த பல்ஜீத் கவுர் என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை ஹரியானா போலீசார், பஞ்சாப் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாறுவேடத்தில் அம்ரித்பால்?: இதற்கிடையே பஞ்சாப் காவல்துறை தரப்பில் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. அதில் நீலநிற ஜீன்ஸ் பேன்ட் மற்றும் வெள்ளை நிற சட்டை அணிந்து குடைபிடித்த படி நபர் ஒருவர் நடந்து செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. அவர் அம்ரித்பால் சிங்காக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் அம்ரித்பால் டர்பன் அணிந்ததுடன், தனது மீசையை சரி செய்து ஷேவிங் செய்துள்ளதாகவும் கைதான பெண் கூறியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு தப்ப முயற்சி?: பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் இருந்து ஹரியானா மாநிலம் குருசேத்திரா மாவட்டம் ஷாபாத் பகுதிக்கு, கடந்த 19ம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் அம்ரித் பால் சிங் தனது உதவியாளர் பபல்ப்ரீத் சிங்குடன் வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் 19ம் தேதி இரவு பல்ஜீத் கவுரின் வீட்டில் தங்கியிருந்த அம்ரித்பால் சிங், மறுநாள் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
அப்போது பதிவானதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகளை தான் போலீசார் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் தலைமறைவாகி உள்ள அம்ரித்பால், வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அம்ரித்பாலின் உதவியாளரான பபல்ப்ரீத்துக்கு, பல்ஜீத் கவுர் அறிமுகம் ஆனவர் என்பதால், தனது வீட்டில் இருவரும் தங்குவதற்கு அனுமதித்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
"வாரிஸ் பஞ்சாப் டி" என்ற அமைப்பை நடத்தி வரும் அம்ரித்பால் சிங், அண்மைக்காலமாக, காலிஸ்தான் தனி நாடு கோரி தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் தனது உதவியாளர் லவ்ப்ரீத் கைது செய்யப்பட்டதால், அஜ்னாலா காவல் நிலையத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார். அப்போது ஏற்பட்ட மோதலில் போலீசார் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் பல்வேறு இடங்களில் மோடி உருவபொம்மையினை எரித்து ஆர்ப்பாட்டம்!