இதரப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் (OBC) இடஒதுக்கீடு குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் முக்கியக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
127ஆவது அரசியல் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற மழைக்காலக்கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத் திருத்தம் மூலம் இதரப் பிற்படுத்தப்பட்டவர்களைக் கண்டறிந்து நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே திரும்ப வழங்கப்பட்டுள்ளது.
சரத் பவார் அதிருப்தி
இதுதொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய சரத் பவார், "பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காணும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது வெறும் கண்துடைப்பு நாடகமே.
மத்திய அரசு விருந்துக்கு அழைப்பு விடுத்து எனது கைகளைக் கட்டிப்போட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்திற்கும், மராத்தா சமுதாயத்திற்கும் மத்திய அரசு தொடர்ந்து துரோகம் செய்துவருகிறது.
இட ஒதுக்கீட்டிற்கான உச்சவரம்பு 50 விழுக்காடு என்பதில், தளர்வுகள் மேற்கொள்ளாமல் மாநில அரசு மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது" என அதிருப்தியுடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ISIS ஆதரவு பெண்கள் கேரளாவில் கைது