இன்று (அக்.22) டெல்லியில் நடைபெற்ற ஹஜ் பயணம் குறித்த கலந்துரையாடலில் பேசிய ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, சவுதி அரேபியா, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மனதில் கொண்டு 2022ஆம் ஆண்டு ஹஜ் பயணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
”2022ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் நவம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும். அதனுடன், ஹஜ் ஆன்லைன் விண்ணப்பப் பணியும் தொடங்கப்படும். ஹஜ் 2022 குறித்த முழு செயல்முறையும் 100 விழுக்காடு தகவல் தொழிநுட்பம் வாயிலாகவே இருக்கும். இந்தோனேஷியாவுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான ஹஜ் யாத்திரிகர்களை இந்தியா அனுப்புகிறது.
இந்த ஆண்டு 3,000க்கும் மேற்பட்ட பெண்கள் ’மெஹ்ராம்’ எனப்படும் ஆண்கள் துணை இல்லாமல் 2020, 2021ஆம் ஆண்டுகளில் ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பித்தனர். அவர்கள் வரும் ஆண்டு பயணம் செய்ய செல்ல விரும்பினால் அவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படும். மெஹ்ராம் வகை அல்லாத பிரிவிலும் செல்ல மற்ற பெண்களும் விண்ணப்பிக்கலாம் ”என்றார்.
மேலும், இரண்டு டோஸ்கள் தடுப்பூசி செலுத்தியவர்களை கருத்தில் கொண்டு ஹஜ் யாத்ரீகர்களுக்கான தேர்வு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான ஹஜ் புனித யாத்திரை ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படுவது வழக்கம். கரோனா பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டு ஹஜ் பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு குலுக்கல் முறையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே யாத்ரீகர்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டனர்.
இதையும் படிங்க: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., மீது தாக்குதல்: அடித்து நொறுக்கப்பட்ட கார்