நாமக்கல்: திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் வெங்கடேசபுரி ஆசிரியர் காலனியைச் சேர்ந்தவர், கேப்ரியல். வங்கியில் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிளாரா, கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நிலை பாதித்து மல்லசமுத்திரம் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
உடல் நிலை மேலும் மோசமானதால் சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் H1N1 வைரஸ் எனப்படும் பன்றிக் காய்ச்சல் தொற்று இருந்தது தெரியவந்தது. தனி வார்டுக்கு மாற்றப்பட்டு கிளாராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
கிளாரா உயிரிழப்பை அடுத்து மல்லசமுத்திரம் வெங்கடேசபுரி பகுதியில் மருத்துவ முகாம்கள் அமைத்து பன்றிக் காயச்சல் பரவலைத் தடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டார். இதையடுத்து, மல்லசமுத்திரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்காலிக மருத்துவ முகாம்களை அமைத்த மருத்துவர்கள், வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல் உள்ளிட்ட பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் பொது மக்களிடம் உள்ளதா என ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், பன்றிக் காய்ச்சல் அறிகுறிகுறிகளுடன் காணப்படுபவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்த கிளாராவின் குடும்பத்தினர் 7 பேருக்கு, தனிக்கவனம் செலுத்தப்பட்டு மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர், "H1N1 என்பது வழக்கமான காய்ச்சலாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட இணை நோய்கள் அவருக்கு இருந்தது. காய்ச்சல் வந்த பொழுது சரியாக சிகிச்சை பெறாமல் பெண் இருந்துள்ளார்’ என அவர் கூறினார்.
இதனிடையே கிளாரா இறப்பு குறித்து செய்தி வெளியிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மருத்துவ முகாமை சூழ்ந்து சிலர் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.
இதையும் படிங்க: ஆணுக்கு லாலிபாப்... பெண்ணுக்கு சாக்லேட் - கோடு வேர்டு வைத்து குழந்தை கடத்திய கும்பல் கைது...