தெலங்கானா மாநிலம் மணிகோண்டாவில் வசிக்கும் சுமந்த் என்ற இளைஞர், அமேசானில் பணிபுரிகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் பெண் பெயரில் போலிக்கணக்குகளைத் தொடங்கி இளம்பெண்கள் பலருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அதன் பின்னர் அவர்களிடம் மென்மையாக பேசி நெருக்கமான நட்புறவை ஏற்படுத்தியுள்ளார். சுமந்த்தை பெண் என நம்பிய இளம்பெண்கள் பலர் தங்களின் புகைப்படங்களை அவருக்கு அனுப்பியுள்ளனர்.
புகைப்படங்களை சேகரிக்கும் வரை மென்மையாகப் பேசிவந்த சுமந்த், அதன் பின்னர் தனது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கியுள்ளார். பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து அவற்றை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு அனுப்பி மனரீதியாக அழுத்தம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார். சுமந்த்தின் தொடர் தொந்தரவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்தப் புகாரின் பேரில் ஹைதராபாத் சைபர் க்ரைம் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் சுமந்த் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. விஜயவாடாவைச் சேர்ந்த சுமந்த், புகார் அளித்த பெண் உள்பட 70 பேரை போலிக் கணக்குகளில் பேசியே ஏமாற்றியுள்ளார்.
இது தொடர்பாக சைபர் க்ரைம் பிரிவு துணை காவல் ஆணையர் பிரசாத் கூறுகையில், ’பெண்கள் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலிக் கணக்குகளை உருவாக்கும் சுமந்த், இணையத்திலிருந்து அழகான பெண்களின் புகைப்படங்களைத் தரவிறக்கம் செய்து டிபியாக (சுயவிவரப்படம்) வைக்கிறார். இதன் பின்னர் இளம் பெண்களைக் குறி வைத்து ரிக்வஸ்ட் அனுப்புகிறார். அவர்களும் பதிலுக்கு இவரைப் பின் தொடர்ந்தால் அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார். அன்பாக பேசி அவர்களுடன் நெருக்கமாகி, புகைப்படங்களை வாங்கிவிடுகிறார். இதன் பின்னர் அவற்றை மார்பிங் செய்து அந்தப் பெண்களுக்கு அனுப்பி மிரட்டி தொந்தரவு கொடுத்துள்ளார்’ என்றார்.

இது போன்ற இணையக்குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அறிமுகமில்லா நபர்களுடன் பேசும்போது பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என துணை காவல் ஆணையர் பிரசாத் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:மாணவி மாயமான வழக்கு: நீதிபதி கார் மீது தார் ஊற்றிய உறவினர்கள்