இன்றைய டிஜிட்டல் இந்தியாவிலும், பெண்களால் தனியாக பயணிக்க முடியாத நிலை உள்ளது. சாலையில் தனியாக நடந்து செல்லும்போதும், பொது போக்குவரத்தில் பயணிக்கும்போதும் பாலியல் ரீதியாக ஆண்கள் சிலர் சீண்டிப் பார்ப்பது இன்னமும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
அச்சமயங்கில் மற்றவர்களின் உதவியை நாடும் பெண்களுக்கு மத்தியில், அஸ்ஸாமில் இளம்பெண் ஒருவர், ஜான்சி ராணியாக மாறி தன்னை தவறான எண்ணத்தில் சீண்டிய இளைஞருக்கு தக்க பாடம் புகட்டியுள்ளார்.
கௌஹாத்தியைச் சேர்ந்தவர் பாவனா காஷ்யப், இவர் கடந்த வெள்ளிக்கிழமை சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் வாகனத்தில் இருந்தவாறே அவரிடம் அட்ரெஸ் கேட்டுள்ளார்.
விலாசம் தெரியவில்லை என அப்பெண் கூறிக்கொண்டிருந்தபோது, திடீரென அந்த இளைஞர் பெண்ணிடம் தவறாக நடந்துவிட்டு பைக்கில் தப்பிக்க முயன்றுள்ளார்.
அஸ்ஸாம் ஜான்சி ராணி
இதனால் ஒருநிமிடம் அதிர்ச்சியடைந்தாலும், சுதாரித்த பாவனா, இளைஞருடைய இருசக்கர வாகனத்தை தடுத்து அவரை தப்பிக்க விடாமல் செய்தார். மேலும், முழு பலத்துடன் அந்த நபரை ஸ்கூட்டருடன் அருகிலிருந்த சாக்கடை கால்வாயில் தள்ளிவிட்டார்.
உடனடியாக அருகிலிருந்தவர்கள் அங்குகூட, காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பெண்ணிடம் அத்துமீறிய நபர், திஸ்பூர் காவல் நிலையத்தில் தற்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
மேலும், இச்சம்பவத்தின் காணொலியை பேஸ்புக்கில் பகிர்ந்த பாவனா, பெண்கள் துணிவுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: 41 வருட தவம்: ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலம் வென்றது இந்தியா