திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் தினந்தோறும் மது அருந்திவிட்டு, தனது மனைவியான மணிமேகலையை அடித்து துன்புறுத்துவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவர் நேற்றிரவு வழக்கம் போல மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான, மணிமேகலை தனது மகனான சாரங்கபாண்டிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அப்போது சாரங்கபாண்டியும் மதுஅருந்தி இருந்த காரணத்தால், தந்தை - மகன் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதமானது கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.
இதில், சாரங்கபாண்டி தனது தந்தையை கட்டையால் பலமாக தாக்கிய உள்ளார். இதனால், பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், கீழே விழுந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க : கோவை குண்டுவெடிப்பு கைதி பாஷா உடல் அடக்கம்; சீமான் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி!
அதன் பேரில், தருமபுரி அரசு மருத்துவமனையில் உயிரைக் காப்பாற்ற முடியாது என்று கூறியதன் காரணமாக, அங்கிருந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ரவிக்குமாரை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே ரவிக்குமார் உயிர் பிரிந்துள்ளது. இந்த நிலையில் ஊர் பொதுமக்கள் மத்தியில் பேசி புதைக்க ஏற்பாடு செய்திருந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சாரங்கபாண்டியை ஜோலார்பேட்டை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.