குருகிராம் (ஹரியானா): குருகிராமின் சின்டெல்ஸ் பாரடிசோ வீட்டு வளாகத்தில் செக்டார் 109இல் 18 மாடிகள் கொண்ட குடியிருப்பு உள்ளது.
இந்த கட்டடத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி நேற்று(பிப்.10) திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
முதலில் செக்டார் 109இல் உள்ள ஆறாவது மாடியில் இருந்த கூரை இடிந்து விழுந்துள்ளது. இதன் தாக்கத்தால் தரைத்தளம் வரை உள்ள அனைத்து அறைகளும் அப்படியே இடிந்து விழுந்துள்ளன. இதுகுறித்து தகவலறிந்து வந்த பேரிடர் மீட்புப்படையினரும், காவல்துறையினரும் விபத்தில் சிக்கிய அனைவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்து குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் துணை இயக்குநர் குல்ஷன் கல்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், "கட்டடத்தின் இடிபாடுகளில் எத்தனை நபர்கள் சிக்கியுள்ளார்கள் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.
சுமார் 5இல் இருந்து 6 பேர் சிக்கியிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். நுழைவுவாயிலில் மொத்தம் 530 குடியிருப்புகள் உள்ளன. இதில் 400 குடும்பங்கள் வசிக்கின்றன. மீட்புப்படையினர், ஆம்புலன்ஸ் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்தில் உள்ளனர்’ எனத் தெரிவித்தார்.
சின்டெல்ஸ் பாரடிசோ நிர்வாகத்தினர் தெரிவிக்கையில், "இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். எங்கள் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பே எங்களின் அதிகபட்ச அக்கறை என்பதால் நாங்கள் இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம்.
முதற்கட்ட விசாரணையில், பழுதுபார்க்கும் பணியில் ஒப்பந்ததாரரின் அலட்சியத்தால் இந்த விபத்து நிகழ்ந்திருப்பது எங்களுக்குத் தெரியவந்துள்ளது. நாங்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் முழுமையாக ஒத்துழைப்பு தருகிறோம்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்’எனத் தெவித்தனர்.
இதையும் படிங்க : Hijab Issue: 'ஆர்எஸ்எஸ் கலாசாரத்தை கல்வி மையங்களில் பரப்பாதீங்க!'