ராஜ்பிப்லா : மத்திய அரசின் பொது சிவில் சட்டத்திற்கு கொள்கை ரீதியாக ஆதரவு அளிப்பதாக டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக் கட்சியின் குஜராத் பழங்குடியின தலைவர் பிரபுல் வசவா கட்சியை விட்டு வெளியேறுவதாக தெரிவித்து உள்ளார்.
அண்மையில் மத்திய பிரதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, வெவ்வேறு விதிகளை கொண்டு ஒரு குடும்பம் செயல்பட முடியதாது போல் இரண்டு சட்டங்களை கொண்டு நாட்டை இயக்க முடியாது என்று தெரிவித்தார். அரசியலைமைப்பு அனைவருக்குமான சமத்துவத்தை உறுதி செய்வதாகவும் அதில் இரண்டு சட்டங்களை கொண்டு இயக்க முடியாது என்று பிரதமர் மோடி கூறினார்.
ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் சிலர் தங்களது சுயநலத்திற்காக சிலக் குழுக்களை தூண்டி விடுவதாக பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கலவையான விமர்சனங்கள் வரத் தொடங்கின. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் பிரதமர் மோடியின் பொது சிவில் சட்டம் குறித்து கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
அதேநேரம் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக டெல்லி ஆம் ஆத்மி கட்சி தெரிவித்தது. நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கு ஆதரவு அளிப்பதாகவும், அதேநேரம் மதம், இனம் என அனைத்து தரப்பினருடன் ஆலோசித்து ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சந்தீப் பதாக் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய ஆம் ஆத்மி கட்சி தலைவர் சந்தீப் பதாக், "ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்திற்கு ஆம் ஆத்மி ஆதரவாக இருக்கிறது. 44வது சட்டப்பிரிவு நாட்டில் ஒரே மாதிரியான சிவில் சட்டம் இருக்க வேண்டும் என்பதை ஆதரிப்பதாக கூறினார். இதன் காரணமாக ஆம் ஆத்மி கட்சியில் பல்வேறு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
இந்நிலையில், பொது சிவில் சட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் மாநிலத்தின் ஆம் ஆத்மி கட்சியின் பழங்குடியின பிரிவின் தலைவர் பிரபுல் வசாவா, கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்து உள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு பழங்குடியின மக்களுக்காக தனித் தொகுதியாக ஒதுக்கப்பட்ட நர்மதா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட வசவா, தோல்வியை தழுவினார்.
கட்சித் தலைமைக்கு ராஜினாமா குறித்து அவர் அனுப்பிய கடிதத்தில், மணிப்பூரில் பழங்குடியினர் கொல்லப்பட்டது குறித்து மத்திய அரசைக் குற்றம் சாட்டிய அவர், அடிப்படைவாதம் மற்றும் வெறுப்பு அரசியலை எதிர்க்குமாறு ஆம் ஆத்மியை வலியுறுத்துவதாக குறிப்பிட்டு உள்ளார். மேலும் பொது சிவில் சட்டம் பழங்குடியினர், பட்டியல் சாதியினர், OBC, சிறுபான்மையினர் மற்றும் பிற சமூகங்களின் அரசியலமைப்பு உரிமைகள், வாழ்க்கை முறை மற்றும் சமூக கட்டமைப்பை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க : பொது சிவில் சட்டத்திற்கு ஆம் ஆத்மி ஆதரவு! ஒருமித்த கருத்தை உருவாக்க அறிவுறுத்தல்!