ஹைதராபாத்: குஜராத் சட்டமன்றத் தேர்தலில் தன்னுடைய முந்தைய சாதனைகளை தகர்த்திருக்கும் பாஜக, பிரதமர் மோடி தலைமையிலான பிரசாரங்களால் இதனை சாத்தியமாக்கியிருக்கிறது. குஜராத் மக்களுக்கு தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி முன்வைத்த வேண்டுகோளுக்கு செவிமடுத்திருக்கின்றனர் என்பது இந்த வெற்றியின் மூலம் உறுதியாகிறது. பாஜக பெற்ற வாக்குகளில் பாதிக்கும் மேலானவை பிரதமர் மோடிக்கு கிடைத்ததாகவே கருதப்படும்.
எதிர்க்கட்சிகள் ஒடுக்கப்பட்ட இந்த சூழலில் பாஜக நினைப்பதை மாநில சட்டமன்றத்தில் செய்ய முடியும். எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்திருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அடுத்த 5 ஆண்டுகளுக்கு சட்டமன்றத்தில் எதிர்வரிசையில் அமர்ந்து குரல் கொடுப்பதை மட்டுமே செய்ய முடியும். தலித் பிரச்சனையோ, பில்கிஸ் பானு வழக்கோ, அரசுக்கு எதிராக இயல்பாக எழும் மனநிலையோ பாஜகவை அசைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
இதில், உச்சம் என்னவென்றால் பாஜகவின் வெற்றியை பாதிக்கும் எந்த பிரச்சனையையும் மோடியின் இமேஜைவைத்து மறைக்க முடியும் என்பதுதான் அவல நகைச்சுவை. கட்சியின் அடிமட்டத் தொண்டர்களான பனா பிரமுக்குகள், மக்களிடம் சென்று பிரசாரம் செய்யும் போது, "பாஜக உங்களுக்கு ஏதும் செய்யவில்லை என்றால் குறைபட்டுக் கொள்ள வேண்டாம் என்றும், மண்ணின் மைந்தரான மோடிக்காக வாக்களியுங்கள்" என்றும் கேட்க நேர்ந்தது.
இங்கே எதிர்முகாமில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்குள்ளாகவே ஒருவருக்கொருவர் பலியாக்கிக் கொண்டனர். வாக்கு சதவீதம் இந்த கட்சிகளால் பகிரப்படுவதற்கு பதிலாக சிதறிப்போனது என்றுதான் கூறவேண்டும். தொகுதிகள் தோறும் களமிறங்கிய முஸ்லிம் வேட்பாளர்கள் வாக்குகளை பிரிக்கவே உதவியுள்ளனர். எதிர்க்கட்சிகளுக்கோ ஏன் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கோ கூட எந்த பலனும் இல்லை.
சூரத் உள்ளாட்சித் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி 27 இடங்களை கைப்பற்றி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதை மனதில் கொண்டு, சிறந்த முறையில் செதுக்கப்பட்ட உத்தியின் விளைவுதான் பாஜக பெற்றிருக்கும் அபரிமிதமான பெரும்பான்மை.
ஒவ்வொரு முறையும் ஓவைசி குஜராத்திற்கு வருகை புரிந்ததையும் பாஜக உன்னிப்பாக கவனித்தது. பாஜகவைப் பொருத்தவரையிலும் காங்கிரஸ்தான் மிகப்பெரிய அச்சுறுத்தல், குறிப்பாக சவுராஷ்டிரா பிராந்தியத்தில் காங்கிரசின் செல்வாக்கை குறைக்க, பிரதமர் நரேந்திர மோடியே நேரடியாக களத்தில் இறங்கி பிரசாரம் செய்தார்.
சவுராஷ்டிரா பிராந்தியத்தில பல பிரசார கூட்டங்களில் பங்கேற்ற அவர், ஒட்டுமொத்த மாநில மக்களுக்கும் அங்கிருந்து உரையாற்றினார். காங்கிரசின் கோட்டையாக இருந்த, கடந்த தேர்தலில் கூட காங்கிரசுக்கு பெரும் எண்ணிக்கையிலான இடங்களைக் கொடுத்த அந்த பிராந்தியத்தில் இருந்து கொண்டு எதிர்க்கட்சிகளின் மீது வசைமாரி பொழிந்தார்.
2017ம் ஆண்டு காங்கிரஸ் சவுராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளிலிருந்து 28 தொகுதிகளை கைப்பற்றியது, பாஜகவோ 19 இடங்களை கைப்பற்றியது. வடக்கு குஜராத்தின் 53 இடங்களில் 24 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியிருந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊரான வாத்நகரில் கூட பாஜகவை தோற்கடித்திருந்தது காங்கிரஸ். அங்கு பாஜக வேட்பாளர் சுமார் 19 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
ஆனால் இந்த முறை பாஜகவின் இந்துத்துவா சித்தாந்தம் அதனுடைய வழக்கமான நிலப்பரப்பை கடந்து, சமூகத்தில் ஊடுருவிய கோட்பாடாக மாறியிருந்தது. இந்துத்துவா என்ற சித்தாந்த அணுகுமுறை எதிர்க்கட்சிகளை மாநிலத்தில் முக்கியத்துவமற்றவையாக மாற்றிவிட்டன.
ஆனால் இவை அனைத்துக்கும் முரணாக, இதே அணுகுமுறை இமாச்சல் பிரதேசத்தில் எடுபடவில்லை அங்கு பாஜகவின் செயல்பாடு பரிதாபமாக இருந்த நிலையில், ஆட்சியை தக்கவைப்பதற்கான சீட்டுகளில் கூட பாஜக வெற்றிபெறவில்லை. இந்துத்துவா சித்தாந்தம் சார்ந்த செயல்பாடும் இந்த மலை சார்ந்த மாநிலத்தில் பாஜகவுக்கு வெற்றியை பெற்றுத்தரவில்லை.
இமாச்சலில் வெற்றியை தீர்மானித்ததில் அரசு ஊழியர்களின் வாக்கு முக்கியமானது. பழைய ஓய்வூதிய திட்டம் காங்கிரசுக்கு சாதகமான பலன்களை தந்திருக்கிறது. குஜராத்தை பாஜக கையிலெடுத்திருப்பதற்கு நேர்ம்றான விளைவு இமாச்சலில் காணக்கிடைக்கிறது. மலை மாநிலமான இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் நிலையில், குஜராத்தில் 7வதுமுறையாக ஆட்சிமைக்கிறது. ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையும் ஆட்சி மாறும் நடைமுறை இமாச்சலில் மாறவில்லை.
இந்த ஆண்டிலும் இதே நடைமுறை தொடர்கிறது. ஆனால் குஜராத்தில் பாஜக பெற்றிருக்கும் வெற்றி 2023ம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தல்கள் உட்பட பாஜகவுக்கு நீண்டகால அடிப்படையில் பலனளிக்கக் கூடியதாக இருக்கும். தோல்வியிலிருந்து பாடங்களை கற்றுக் கொண்டிருக்கும் பாஜகவின் செயல்பாடு வருங்காலத்தில் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதையும் படிங்க: வெற்றி பெற்றவர்களை பாதுகாக்கும் காங்கிரஸ் - இமாச்சலில் நடப்பது என்ன?