அகமதாபாத்: குஜராத்தில் 182 தொகுதிகளுக்கு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பா.ஜ.க., 156 இடங்களைக் கைப்பற்றி வரலாறு காணாத வெற்றி பெற்றது. கடந்த 1960ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் உருவாக்கப்பட்டது முதல் எந்த கட்சியும் வென்றிராத வகையில், தொடர்ந்து 7 முறை ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி பா.ஜ.க. புது வரலாறு படைத்தது.
இந்நிலையில், நாளை (டிசம்பர் 10) பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் காந்திநகரில் நடைபெறுகிறது. சம்பிரதாய கூட்டத்தில் அடுத்த முதலமைச்சர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டு பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் என பா.ஜ.க. தலைமைக் கொறடா பங்கஜ் தேசாய் தெரிவித்தார்.
வரும் 12ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் நடைபெறும் விழாவில் குஜராத் முதலமைச்சராக பூபேந்திர பட்டேல் பதவியேற்க உள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
காந்திநகர் பகுதியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமித்ஷா உள்ளிட்ட அரசியல் தலைவர் கலந்து கொள்ள உள்ளதாக சி.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆந்திராவில் ஜூனியர் டிரம்ஸ் சிவமணி - டிரம்ஸ் வாசித்து கவரும் சிறுவன்