குஜராத்தில் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில், "கடந்த ஆண்டுகளில் எத்தனை சிங்கங்கள் உயிரிழந்துள்ளன? அதை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன?" என காங்கிரஸ் எம்எல்ஏ விர்ஜி தும்மர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் கன்பத் வாசவா, கடந்த இரண்டு ஆண்டுகளில் 313 சிங்கங்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "2019ஆம் ஆண்டு 154 சிங்கங்களும், 2020ஆம் ஆண்டு 159 சிங்கங்களும் உயிரிழந்துள்ளன. அவைகளில் பெண் சிங்கங்கள் 90 , ஆண் சிங்கங்கள் 71, குருளைகள் 152 ஆகும். இவற்றில் இயற்கைக்கு மாறான காரணங்களால், 23 சிங்கங்கள் உயிரிழந்துள்ளன" என்று தகவல் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "கிர் சரணாலயத்திற்கு அருகிலுள்ள கிணறுகளில் சிங்கங்கள் விழுவதை தடுக்க 43 ஆயிரம் அடியில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. 2015இல் 523ஆக இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை தற்போது 674 ஆக அதிகரித்துள்ளது. சிங்கங்களின் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றன" என்று கூறினார்.
இதையும் படிங்க : கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட தலாய் லாமா!