பெங்களூரு: கர்நாடக மாநிலம் துமாக்குரு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சாந்தினி என்பவர் மூன்று ஆண்டுகளாக கௌரவ விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவின்படி கல்லூரிக்குள் ஹிஜாப் அணிய கூடாது என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சாந்தினி தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து சாந்தினி கூறுகையில், "கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக பணிபுரிந்து வந்தேன். ஹிஜாப் அணிவதில் எந்த தொந்தரவும் ஏற்படவில்லை. ஆனால் வியாழக்கிழமை(பிப்.18) கல்லூரி முதல்வர் என்னிடம் ஹிஜாப் அணிந்து பாடம் நடத்த கூடாது என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவு எனது சுயமரியாதைக்கு எதிராக உள்ளது. இதன்காரணமாக பணியை ராஜினாமா செய்தேன்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக கர்நாடக உயர் நீதிமன்றம், மத அடையாளங்களை வெளிப்படுத்தும்விதமாக ஹிஜாப், காவி சால்வை, மதக் கொடிகள் உள்ளிட்டவற்றை அணிந்தோ, கையில் ஏந்தியோ கல்வி மையங்களுக்குள் (பள்ளி, கல்லூரிகள்) வரக்கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கர்நாடகாவில் கல்லூரிகள் திறப்பு: ஹிஜாபுக்கு மறுப்பு!