டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் படங்கள், சீரிஸ்கள், செய்திகள் ஆகியவற்றை ஒழுங்குப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் விதமான நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துகளை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக, இணையதள செய்தி நிறுவனங்கள், சமூக வலைதளங்கள், ஓடிடி தளங்கள் ஆகியவற்றை ஒழுங்குப்படுத்தும் வகையில் தகவல் தொழில்நுட்பம் (இணைய ஊடக நெறிமுறைகளுக்கான விதிகள்) 2021 வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் புதிய விதிகளை வெளியிட்டுள்ளனர். அதன்படி, புகாரை தெரிவிக்கும் விதமாக சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்கள் இந்தியாவில் ஒரு அலுவலரை நியமிக்க வேண்டும்.
குறிப்பிட்ட பதிவுகளை நீக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பயனாளியிடம் கருத்து நீக்கப்பட்டது குறித்து தகவல் அளிக்க வேண்டும். பாதுகாப்பு, வெளியுறவு, உள்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்பு, சட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் ஆகிய அமைச்சகங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று உருவாக்கப்பட்டு இதுகுறித்து கண்காணிக்கவுள்ளது.
இக்குழு தானாக முன்வந்து கூட புகார்களை பதிவு செய்யலாம். சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்கும் உத்தரவுகளை பிறப்பிக்க இணைச் செயலாளருக்கு இணையான அலுவலர் ஒருவரை அரசு நியமிக்கவுள்ளது.
புதிய விதிகளின் முக்கிய அம்சங்கள்:
- அதுதூறு, இனவாத, ஆபாசமான, சிறார்களுக்கு தீங்கு விளைவிக்கும் கருத்துகளுக்கு தடை. நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை, பாதுகாப்பு, மற்ற நாடுகளுடனான உறவை அச்சுறுத்தும் விதமான கருத்துக்கள் வெளியிட தடை.
- நீதிமன்றம் உத்தரவிடும்பட்சத்தில், சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் சட்டவிரோதமான கருத்துகளை 36 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும்.
- சட்டவிரோதமாக தகவல் பகிர்வோரை சம்பந்தப்பட்ட சமூக வலைதளம் கண்டறிய வேண்டும்.
- சைபர் பாதுகாப்பு விவகாரங்கள், விதிமீறல்கள் குறித்த தகவலை புகார் அலுவலர் அரசிடம் 72 மணி நேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும்.
- ஒரே மாதத்தில் குறைகளை கேட்டறிந்து சரி செய்ய சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனங்கள் புகார் அலுவலரை நியமிக்க வேண்டும்.
- சர்ச்சைக்குரிய கருத்துகளை 24 நேரத்திற்குள் நீக்க வேண்டும்.
- சுய கட்டுப்பாடு, சுய கட்டுப்பாட்டை ஒழுங்கப்படுத்த சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அமைப்பு, அதனை கண்காணிக்க அரசு அமைப்பு என புதிய விதிகளை செயல்படுத்த மூன்றடுக்கு அமைப்பு உருவாக்கப்படவுள்ளது.
- விதிமீறல்கள் குறித்து மக்கள் புகார் தெரிவிக்க ஒரு இணையதளம் உருவாக்கப்படவுள்ளது. குறைகளை 15 நாள்களுக்குள் தீர்க்க வேண்டும்.
- முதன்மை புகார் அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டு, ஆறு மாதத்திற்கு ஒரு முறை அவர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.