டெல்லி: இணையதளங்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், கடைவீதிகளுக்கு சென்று பொருள்களை வாங்குவதை விட, வீட்டிலேயே அமர்ந்து கொண்டு ஆன்லைனில் பொருள்களை வாங்கவே நகர்ப்புற மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
கரோனா ஊரடங்கு காலத்திற்குப் பிறகு அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் ஆன்லைன் ஷாப்பிங் பழக்கம் பெரிதும் அதிகரித்துவிட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பல போலி நிறுவனங்களும் முளைத்தன. தரமற்ற பொருள்களை போலியான மதிப்புரைகளை வழங்கி விற்பனை செய்கின்றனர்.
இதனால் மதிப்புரைகளை நம்பி பொருள்களை வாங்கும் மக்களுக்கு நஷ்டமும், ஏமாற்றமும் ஏற்படுகிறது. இந்த நிலையில், நுகர்வோர் நலனை பாதுகாக்கும் வகையில் இ-காமர்ஸ் தளங்களில் பதிவேற்றப்படும் போலியான மதிப்புரைகள் கண்காணிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக, இந்திய விளம்பரங்கள் தரநிலை கவுன்சில், மின்னணு வர்த்தக நிறுவனங்கள், நுகர்வோர் மன்றங்கள், சட்டப் பல்கலைக்கழகங்கள், வழக்கறிஞர்கள், ஃபிக்கி, சி.ஐ.ஐ, நுகர்வோர் உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட பங்குதாரர்களுடன் இணைந்து, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை நேற்று(மே 27) காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தியது.
இணையதளங்களில் போலியாக வெளியிடப்படும் மதிப்புரைகள் குறித்தும், அவற்றை கையாள்வது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மதிப்புரைகளின் வகைகள் குறித்தும், அவை எந்த அடிப்படையில் பதிவேற்றப்படுகின்றன என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டம் தொடர்பாக நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இ-காமர்ஸ் தளங்களில் போலியான மதிப்புரைகளை கண்காணிப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு உருவாக்கவுள்ளது.
நாடு முழுவதும் இயங்கும் இ-காமர்ஸ் நிறுவனங்களால் பின்பற்றப்படும் நடைமுறைகளையும், சர்வதேச அளவில் சிறப்பாக உள்ள நடைமுறைகளையும் ஆய்வு செய்து, இந்த கண்காணிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்படும். ஆன்லைனில் பொருள்களை வாங்கும்போது, நேரடியாக அவற்றை ஆய்வு செய்ய முடியாததால், அந்தப் பொருள்களை ஏற்கனவே பயன்படுத்தியவர்களின் மதிப்புரைகளை பொதுமக்கள் பெரிதும் சார்ந்திருக்கின்றனர்.
அதனால், இந்த மதிப்புரைகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்வது மற்றும் சம்பந்தப்பட்ட தளத்தின் பொறுப்புத்தன்மையைக் கண்டறிவது மிகவும் முக்கியம். இந்த மதிப்புரைகளை வர்த்தக நிறுவனங்கள் எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் என்பதையும் அவர்கள் தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:ஆந்திராவில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு: 4 பேர் உயிரிழப்பு