காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி உள்ளிட்ட முன்னணி எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்திலிருந்து விஜய் சௌக் நோக்கி முன்னதாக பேரணி மேற்கொண்டனர்.
இந்தப் பேரணியில் திமுக, சிவசேனா, சமாஜ்வாதி கட்சி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 15 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன.
டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி
இந்நிலையில், பேரணியில் பங்கேற்ற திமுக மாநிலங்களவை உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன், ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பிரத்தியேகப் பேட்டியளித்தார். அவர் பேசுகையில்,
"அரசு மக்களின் பிரச்னையை விவாதிக்கத் தயாராகவே இல்லை. தனது முதலாளிகளிடம் அரசு நிறுவனங்களை விற்பதிலேயே அரசு முனைப்பு காட்டி வருகிறது. இரண்டு நாள்களுக்கு முன்தாகவே அவைகளை அரசு ஒத்திவைத்துள்ளது. எங்களிடம் கலந்து பேசி விவாதத்திருந்தாலே பிரச்னைகள் முடிவுக்கு வந்திருக்கும்" என்றார்.
மாணிக்கம் தாகூர் பேட்டி
தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், "நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் குரல் முடக்கப்படுகிறது. விவாதத்திற்கு அரசு தயாராக இல்லாததால் நாடாளுமன்றம் முற்றிலும் முடங்கியது.
நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஜனநாயகப் படுகொலையை உணர்த்தவே எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு பேரணி நடத்தியுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: ’60% மக்களின் குரல் ஒடுக்கப்படுகிறது’ - எதிர்க்கட்சிகள் பேரணியில் ராகுல் குற்றச்சாட்டு