புதுச்சேரி கதிர்காமம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கரோனாவிற்கு புதியதாக இயன்முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவமனை உருவாக்கப்பட்டது. 50 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையில், கரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்திய மருத்துவமுறையான சித்தா, ஆயுர்வேதா மற்றும் ஹோமியோபதி சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.
இந்த மருத்துவமனையின் தொடக்க விழா இன்று (மே 14) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு மருத்துவமனையைத் தொடங்கிவைத்தார்.
அப்போது, பேசிய அவர், 'புதுச்சேரியில் புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவமனைக்காக மக்கள் நன்கொடை அளித்தால் ஆக்ஸிஜன் படுக்கைகள் உருவாக்க முடியும். நன்கொடை அளிக்க அனைவரும் முன்வர வேண்டும். ஆக்ஸிஜன் படுக்கை பற்றாக்குறையைப் போக்க புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 300 படுக்கைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் தற்போது ஒரு லட்சத்து 40 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. புதிதாக 30 ஆயிரம் தடுப்பூசிகள் வாங்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.