டெல்லி : தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக மணிப்பூரை சேர்ந்த 9 மெய்தி பயங்கரவாத குழுக்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய அமைப்புகளுக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிவிக்கையில், மணிப்பூரை சேர்ந்த மக்கள் விடுதலை ராணுவம் என்று அழைக்கப்படும் பி.எல்.ஏ. மற்றும் அதன் அரசியல் பிரிவு, புரட்சிகர மக்கள் முன்னணி, ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி மற்றும் அதன் ஆயுதப் பிரிவு, மணிப்பூர் மக்கள் ராணுவம் ஆகிய அமைப்புகள் ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காங்கிலீபாக் மக்கள் புரட்சி கட்சி (PREPAK) மற்றும் அதன் ஆயுதப் பிரிவு, காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சி (KCP) மற்றும் அதன் ஆயுதப் பிரிவு, காங்லீ யாயோல் கன்பா லுப் (KYKL), ஒருங்கிணைப்புக் குழு (CorCom) மற்றும் சோசலிச ஒற்றுமைக்கான கூட்டணி காங்லீபக் ஆகிய அமைப்புகளுக்கும் மத்திய அரசு தடை விதித்து உள்ளது.
இதில் மக்கள் விடுதலை ராணுவம், ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி, காங்கிலீபாக் மக்கள் புரட்சி கட்சி, காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய அமைப்புகள் மத்திய வெளியுறவு அமைச்சகத்தால் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தடை செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது அந்த தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
மெய்தி பயங்கரவாத அமைப்புகளை உடனடியாக கட்டுப்படுத்தவும், பிரிவினைவாத, பயங்கரவாத மற்றும் வன்முறைச் செயல்களை அதிகரிக்க தங்கள் வீரர்களை திரட்டுவதற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார்கள் என்று மத்திய அரசு கருதுவதாகவும் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர்களுடன் இணைந்து நாச வேலைகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு தடை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : இங்கிலாந்து பிரதமருக்கு விசேஷ தீபாவளி பரிசு.. கோலி கையெழுத்திட்ட பேட் பரிசளித்த ஜெய்சங்கர்!