கூகுள் மேப் நீருக்கடியில் இருக்கும் மர்மத் தீவை கண்டுபிடித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கொச்சிக்கு அருகிலுள்ள அரேபியக் கடலில் பீன் வடிவிலான தீவு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதன்முதலில் செல்லனம் கர்ஷிகா சுற்றுலா மேம்பாட்டு சங்கம் தான் பேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிட்டது. இந்தக் கண்டுபிடிப்பு குறித்து கேரள மீன்வள மற்றும் பெருங்கடல் ஆய்வுகள் பல்கலைக்கழகத்திற்கும் தகவல் அனுப்பப்பட்டது.
ஆச்சரியமாக, அந்த இடத்தில் தீவு இருப்பதற்கான எவ்வித அடையாளங்களும் இல்லை. கூகுள் வரைபடத்தின்படி, பீன் வடிவ தீவு 8 கி.மீ நீளமும், 3.5 கி.மீ அகலமும் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலின்படி, கடலுக்கு அடியில் சுமார் 25 மீட்டர் ஆழத்தில் மணல் குவியலாகச் சேர்ந்தது தான் கூகுள் மேப்பில் தீவு போல் காட்சியளிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மேலும் ஆய்வு மேற்கொள்ளக் கேரள மீன்வள மற்றும் பெருங்கடல் ஆய்வுகள் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. கூகுள் மேப்பின் மர்மத்தீவு புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.