ஜபல்பூர்: மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர்(Jabalpur) மாவட்டத்தில் உள்ள சாபுரா பிதோனி என்ற இடத்தில் கேஸ்(LPG) ஏற்றி வந்த சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
இது குறித்து மேற்கு மத்திய ரயில்வேயின் தலைமை செய்தித் தொடர்பு அலுவலர் கூறுகையில், “இந்த சம்பவத்தில் சரக்கு ரயில் இறக்குவதற்கு வைக்கப்பட்டிருந்தபோது தடம் புரண்டது. நேற்று (ஜூன் 6) இரவு கேஸ் ஏற்றி வந்த சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் இறக்குவதற்காக வைக்கப்பட்டிருந்தபோது தடம் புரண்டது.
இந்த விபத்தின்போது ரயிலின் மெயின் லைன் இயக்கத்தில் எந்த வித பாதிப்பும் இல்லை. எனவே, மெயின் லைனில் ரயில்கள் இயக்கம் வழக்கம்போல் உள்ளது. இன்று (ஜூன் 7) காலை முதல் ரயில்வே உயர் அதிகாரிகள் முன்னிலையில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும். மேலும், விபத்து குறித்த தகவல்கள் மற்றும் சீரமைப்புப் பணிகளின் நிலவரம் அடுத்தடுத்து வெளியிடப்படும்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஜூன் 2ஆம் தேதி ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தின் பஹானகா பஜார் ரயில் நிலையம் அருகே பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு ரயில், மேற்குவங்க மாநிலத்தின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் மோதிய விபத்து உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த விபத்து நடந்த இடத்தில் இரவு பகலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்களால் நடத்தப்பட்ட சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்து, வழக்கமான ரயில் பயணமும் நடைபெற்று வருகிறது.
இருப்பினும், இந்த சம்பவத்தின் சுவடு இன்னும் மக்களின் அச்ச உணர்வில் இருந்து செல்லவில்லை என்றுதான் கருத வேண்டிய நிலை உள்ளது. அதேநேரம், மீண்டும் ஒடிசாவில் சுண்ணாம்பு ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து, தமிழ்நாட்டில் திருச்சி அருகே ரயில்வே தண்டவாளத்தில் டயர் வைக்கப்பட்டிருந்தது,
கொல்லம் - சென்னை செல்லும் சென்னை எழும்பூர் விரைவு ரயில் பெட்டியில் விரிசல், தெலங்கானா மாநிலத்தின் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து அகர்தலா செல்லும் விரைவு ரயிலின் ஏசி பெட்டியில் புகை வெளி வந்தது, திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் சிக்னல் உடைக்கப்பட்டது என ரயில்வே விபத்து தொடர்பான செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: செகந்திராபாத் - அகர்தலா விரைவு ரயிலில் புகை... அலறியடித்து கீழே இறங்கிய பயணிகள்!