பனாஜி : கோவாவில் உள்ள பெனாலிம் கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25) இரண்டு சிறுமிகள் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர். இது அம்மாநிலம் முழுக்கக் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மற்றொரு சிறுமியும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வேலை வாங்கித் தருவதாகக் கூறி அச்சிறுமியை அழைத்த இருவர் கோவாவின் தெற்குப் பகுதியில் உள்ள கியூபெம் என்கிற ஊரில் அடைத்துவைத்து மூன்று நாள்கள் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
இது தொடர்பாக 32 வயது இளைஞரையும், 63 வயது முதியவரையும் காவலர்கள் கைது செய்துள்ளனர். ஒரே வாரத்தில் மூன்று சிறுமிகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளது பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
முன்னதாக இது தொடர்பாக பேசிய மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த், “`தங்கள் மகள்கள் இரவு நேரத்தில் ஏன் தாமதமாக வீடு திரும்புகிறார்கள் என்பதை பெற்றோர் அறியவேண்டும். குறிப்பாக 14 வயதுகளில் இருக்கும் அச்சிறுமிகள் இரவு முழுக்கக் கடற்கரையில் இருப்பதன் காரணத்தை பெற்றோர் தெரிந்துகொள்ளவேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பைப் பெற்றோரே உறுதிசெய்யவேண்டும். அரசையும் காவல்துறையையும் மட்டுமே குறைசொல்லக்கூடாது” என்று தெரிவித்தார்.
இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் தற்போது பிரமோத் சாவந்த் தனது பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், “தான் சொல்லிய கருத்து தவறான அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “தானும் ஒரு 14 வயதுப் பெண் குழந்தையின் தந்தை என்பதையும், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பம் எத்தகைய துன்பத்திற்கு ஆளாகியிருக்கும் என்பதைத் தன்னால் நன்கு உணரமுடியும்” என்றும் கூறியுள்ளார்.
முதலமைச்சரின் இந்தப் பேச்சுகளுக்கு மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், “முதலமைச்சர் பிரமோத்
சாவந்தின் கருத்து கண்டனத்துக்குரியது. ஒரு முதலமைச்சராக பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அவரின் கடமை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!