கோவாவில் புத்தாண்டை முன்னிட்டு போதைப்பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து டோனா பௌலா பகுதியில் உள்ள கோவா சர்வதேச மையத்தில் குற்றப்பிரிவு காவலர் குழு ரகசியமாகக் கண்காணிக்கத் தொடங்கியது.
இதில் கோவா சர்வதேச மையத்தில் சந்தேகத்திற்கிடமான மூன்று நபர்களின் அறை, உடைமைகளைச் சோதனை செய்தனர். அதில் மறைத்துவைத்திருந்த எம்.டி.எம்.ஏ. எனப்படும் போதை மாத்திரைகள் பறிமுதல்செய்யப்பட்டன. மொத்தம் ரூ.8 லட்சம் மதிப்பிலான 85 கிராம் எம்.டி.எம்.ஏ. மாத்திரைகள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக ஹைதராபாத்தைச் சேர்ந்த அயன் அலி கான், மும்பைச் சேர்ந்த வாலண்டைன் பெரேராஸ், ட்ரோம் பெர்னாண்டஸ் ஆகிய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
எம்.டி.எம்.ஏ. என்றால் என்ன?
எம்.டி.எம்.ஏ. மாத்திரை உலகில் விலை உயர்ந்த போதைப்பொருள் ஆகும். இதைப் பயன்படுத்துவதும், பதுக்குவதும் சட்டப்படி குற்றம் மீறிப் பதுக்கிவைத்தால் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்படும். தற்போது இந்த வகை போதைப்பொருள்கள் கடத்தல் அதிகரித்துவருகிறது.
உலகம் முழுவதும் இதுபோன்ற போதைப்பொருள்களைக் கட்டுப்படுத்தும் முயற்சி நடந்தாலும், இதன் வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை. மிகவும் வீரியமுள்ள இந்தப் போதைப்பொருளைப் பயன்படுத்துவோர் சுமார் 48 மணி நேரம் தொடர்ந்து தள்ளாடியபடியே இருப்பராம்.