ஹைதராபாத்: கரோனா நோய்த் தொற்றால் உலகளவில் ஐந்து கோடியே 72 லட்சத்து 39 ஆயிரத்து 964 பேர் பாதிக்கப்பட்டும், 13 லட்சத்து 65 ஆயிரத்து 695 பேர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும், மூன்று கோடியே 97 லட்சத்து 34 ஆயிரத்து 942 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தக் கரோனா பாதிப்பினால் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு ஒரு கோடியே 20 லட்சத்து 70 ஆயிரத்து 712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்து 58 ஆயிரத்து 333 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நோய்த் தொற்று இந்தியாவில் இன்று ஒன்பது மில்லியன் (90 லட்சம்) மக்களைப் பாதித்துள்ளது. இருப்பினும், இந்த வாரத்தில் தினந்தோறும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்தப் பாதிப்பானது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையான 130 கோடியில் (1.3 பில்லியன்) 0.6% ஆகும்.
கோவிட்-19இன் நான்காவது அலை ஹாங் காங் நகரத்தில் தொடங்கியுள்ளதாக அந்நகரின் உயர்மட்ட தொற்றுநோய் நிபுணர்கள் வியாழக்கிழமை (நவ. 19) அரசாங்கத்தை எச்சரித்தும், அவசர நடவடிக்கைக்கு அழைப்பும் விடுத்தும் உள்ளனர். நகரத்தில் கரோனா வைரஸ் தாக்கம் வேகமாக அதிகரித்துவருவதால், மழலையர் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான தனிப்பட்ட வகுப்புகளை ஹாங்காங் நிறுத்தியுள்ளது.
மெக்சிகோ நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனால் கரோனா உயிரிழப்புகளில் ஒரு லட்சத்தைக் கடந்த நான்காவது நாடாக உள்ளது.
இதையும் படிங்க: மெக்சிகோவில் ஒரு லட்சத்தைக் கடந்த கரோனா உயிரிழப்பு