ஜமுய் (பீகார்): திருமணம் என்பது ஆண், பெண் இடையே உருவாகும் பந்தம் என்பதை எல்லாம் கடந்து, தன் பாலின ஈர்ப்பு திருமணம் தற்பொது அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மனங்கள் இணைவதே திருமணத்தின் முக்கிய சடங்கு என பலரும் தன் பாலின ஈர்ப்பு திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஒன்றரை வருடமாக நல்ல புரிதலில் இருந்த இரண்டு பெண்கள், தங்களது வாழ்கையை ஒன்றாக கழிக்க விரும்பியுள்ளனர். அவர்களின் எண்ண வெற்றியாக கடந்த அக்.24-ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், இவர்களின் திருமணம் தாலி கட்டி பாரம்பரிய முறைப்படி நடந்துள்ளது.
ஜமுய்யில் உள்ள திக்கி கிராமத்தைச் சேர்ந்தவர், அசோக் தந்தியின் மகள் நிஷா குமாரி (18). மேலும், லக்கிசராய் மாவட்டத்தின் குசந்தா கிராமத்தைச் சேர்ந்தவர், காமேஷ்வர் தந்தியின் மகள் கோமல் (20). இந்நிலையில், இவர்களின் மலரும் நினைவுகளான முதல் சந்திப்பு, நிஷாவின் தாய் மாமா திருமணத்தில் தொடங்கி உள்ளது.
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த திருமணத்தில் தான், நிஷா மற்றும் கோமல் முதன்முதலில் சந்தித்து நண்பர்களாக ஆகியுள்ளனர். அதைத் தொடர்ந்து, அவர்கள் பக்கத்து கிராமங்களில் வசித்ததால், அடிக்கடி சந்தித்து பேசியுள்ளனர். இவர்களில் புரிதல் நிறைந்த நட்பு நாளடைவில் காதலாக மலரவே, இருவரும் கணவன் மனைவியாக தங்கள் மிச்ச வாழ்க்கையை களிக்க விரும்பியுள்ளனர்.
இவர்களின் எண்ணம் இரு வீட்டாருக்கும் தெரியவந்த நிலையில், இருவரும் பல சவால்களை சந்தித்தனர். இருப்பினும் தங்கள் முடிவில் தெளிவாக இருந்ததால், இருவரின் காதலும் திருமணத்தில் முடிந்துள்ளது. இதுகுறித்து நிஷா கூறுகையில், “எனது மாமாவின் திருமணத்தில் தான் நான் கோமலை முதன்முதலில் சந்தித்தேன். அதன் பிறகு நாங்கள் வலுவான உறவை வளர்த்துக் கொண்டோம். நாங்கள் ஒன்றாக வாழ விரும்பி, மூன்று நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டோம்" எனக் கூறினார்.
இந்நிலையில், இந்த தன் பாலின ஈர்ப்பு திருமணம் திக்கி மற்றும் குசந்தா கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து திக்கி கிராமவாசி கூறுகையில், “எங்கள் கிராமத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்ததை எங்களால் நம்ப முடியவில்லை. இவர்களின் திருமணம் குறித்து கேள்விப்பட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தஞ்சையில் பட்டாக்கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய இந்து எழுச்சிப் பேரவை நிர்வாகி கைது!