டெல்லி: மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 12 வயது சிறுமி உதவி கேட்டு 8 கிலோ மீட்டர் வரை சாலையில் நடந்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பாஜக ஆட்சியில் சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரை நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற சிறுமிக்கு உதவி செய்ய மறுக்கும் வீடியோ வெளியாகிய நிலையில் இந்த சம்பவம் மனிதக்குலத்துக்கே அவமானம் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த கொடூர வன்கொடுமையைக் கண்டித்து பிரியங்கா காந்தி தனது X தளத்தில் "கடவுளின் நகரமான உஜ்ஜைனியில் சிறுமிக்கு நடந்த இந்த கொடுமை மனதை உலுக்குகிறது.
பாலியல் கொடுமைக்குப் பின்னும் அந்த சிறுமி இரண்டரை மணி நேரமாக உதவி கேட்டு வீடு வீடாகச் சென்று சாலையில் மயங்கி விழுந்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் சட்ட ஒழுங்கும், பெண்களின் பாதுகாப்பும் இது தானா?. 9 ஆண்டு காலமாக இருக்கும் இந்த தவறான ஆட்சியில் சிறுமிகள், பெண்கள், பழங்குடியினர், பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. சிறுமிகளைக் கூட பாதுகாக்க முடியவில்லை என்றால் அன்பு சகோதரி எனத் தேர்தலுக்காக பிரசாரம் செய்து என்ன பயன்?" என பதிவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: பட்டப்பகல்லில் எல்ஜேபி(R) தலைவர் அன்வர் கான் சுட்டுக்கொலை: உடலை காரில் வைத்து உறவினர்கள் போராட்டம்!
உஜ்ஜையினியில் 12 வயது சிறுமியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகும் வரை, மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாஜக அரசு பெண்கள் மற்றும் சிறுமிகளை பாதுகாக்க இயலாது நிலையில் உள்ளனர் எனக் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பிரதமர் மோடி மற்றும் மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகிய இருவரும் பிரசாரத்தில் இருந்து சிறுது நேரம் ஒதுக்கினால் மட்டுமே பெண்களின் குமுறல்களைக் கேட்க முடியும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி கூறியுள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு உரிய சிகிச்சை பெற்று வருவதாகவும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபரை கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்து உள்ளார். மேலும் இந்த சம்பவத்தை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒரு லட்டு ஒரு கோடிப்பே! விநாயகர் விஜர்சனம் வெகு சிறப்பு - ரூ.1.26 கோடிக்கு ஏலம் போன லட்டு!