பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இளைஞர் ஒருவர், தனது நண்பன் காதலிக்கும் இளம்பெண் சரியில்லை என்றும், அவளை காதலிக்க வேண்டாம் என்றும் கூறியதாகத் தெரிகிறது. இதை அறிந்த இளம்பெண் ஆத்திரமடைந்துள்ளார். தன்னைப் பற்றி காதலனிடம் கூறிய அந்த இளைஞரை பழிவாங்க முடிவு செய்துள்ளார்.
அதனால், அந்த இளைஞருடைய சகோதரியின் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலிக் கணக்குத் தொடங்கி, ஆபாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மார்ஃபிங் செய்த புகைப்படங்களைப் பதிவிட்டு, அவள் விலை மாது என குறிப்பிட்டு செல்போன் எண்ணையும் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவைப் பார்த்துவிட்டு, பலரும் இளைஞரின் சகோதரிக்கு செல்போனில் அழைத்துள்ளனர். இதையடுத்து, சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்திய போலீசார், இளைஞர் மீதான கோபத்தில் அவரது தங்கையை பழிவாங்கிய இளம்பெண்ணை கைது செய்தனர். அந்த போலி இன்ஸ்டாகிராம் கணக்கையும் நீக்கினர். கைதான இளம்பெண் பி.காம் படிக்கும் கல்லூரி மாணவி என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: ஜூனியர் மாணவரை தாக்கிய சீனியர் மாணவர்கள் - எச்சரித்த காவல் துறை