புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள சந்தைக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜஸ்ரீ. இவர் சேதராப்பட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்தார். இவர் நேற்று (ஏப்ரல் 20) வழக்கம்போல் கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் வெகுநேரம் ஆகியும் மாணவி வீடு திரும்பாததால் அவரது பெற்றோர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.
பின்னர் இது குறித்து மாணவியின் பெற்றோர் காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்புகாரின்பேரில் காவல் துறையினர் காணாமல்போன மாணவியைத் தேடியுள்ளனர்.
இதற்கிடையில் துறையூர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் சாக்குமூட்டை ஒன்று கிடப்பதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், சாக்கு மூட்டையைப் பிரித்துப் பார்த்ததில் பெண்ணின் சடலம் கிடந்துள்ளது. மேலும் பெண்ணின் உடலில் ரத்தக் காயங்கள் இருந்ததால் அவர் அடித்துக் கொலைசெய்யப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து விசாரணையில் காணாமல்போன மாணவி ராஜஸ்ரீதான் கொலைசெய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி சுடுகாட்டில் வீசப்பட்டிருக்கிறார் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது மாணவி ராஜ்ஸ்ரீ கொலைசெய்யப்பட்டது ஏன்? என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் முதற்கட்ட விசாரணையில், அவர் ஒரு இளைஞரைக் காதலித்துவந்ததாகவும், அவர்கள் இருவரும் வெளியே சென்றபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் காதலன், மாணவியை வெட்டிக்கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசியது தெரியவந்தது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் இன்று முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்