கயா: பிகார் மாநிலம் மட்டுமின்றி நாட்டையே உலுக்கிய சம்பவம் பாரா படுகொலை. 1992ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போதைய காலக்கட்டத்தில் மாவோயிஸ்ட்கள் மற்றும் பயங்கரவாதிகளால் மக்கள் கடும் துயரங்களை சந்தித்தனர். கடந்த 1992ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த படுகொலை சம்பவத்தில் மாவோயிஸ்ட் பயங்ரவாத குழுவின் தளபதியான கிரானி யாதவ் தலைமையில் பயங்கரவாத கும்பல் கயா மாவட்டத்தில் உள்ள பாரா கிராமத்தை சூறையாடி உள்ளனர்.
இந்த கோர சம்பவத்தில் அப்பாவி மக்கள் 12 பேர் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கிராம மக்கள் பலர் பிணை கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு சித்ரவதைகள் கொடுக்கப்பட்டதாகவும், உயரமான இடங்களில் இருந்து கீழே தள்ளி விடப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
பாரா கிராமத்தில் இருந்த குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்டதால், ஒட்டுமொத்த கிராமமும் தீக்கிரையாகின. இந்த கோர சம்பவத்தில் ஒட்டு மொத்தமாக 35 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவோயிஸ்ட்டை சேர்ந்த கிரானி யாதவ் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் 31 ஆண்டுகளுக்கு பின் தீர்வு காணப்பட்டுள்ளது.
இந்த வழக்கை மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் விசாரித்து வந்தது. வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் உள்பட 21 பேரிடம் நீதிபதிகள் வாக்குமூலங்களை பெற்றனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி வழக்கு தொடர்பாக இறுதி கட்ட விசாரணையை முடித்த நீதிபதிகள், கிரானி யாதவை தண்டனைக்குரியவர் என தீர்ப்பு வழங்கினர். இந்த வழக்கு தொடர்பாக கிரானி யாதவ்வுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை குறித்த தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், நேற்று(மார்ச்.2) நீதிபதிகள் தீர்ப்பை வழங்கினர். பாரா படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ராமசந்திர யாதவ் என்ற கிரானி யாதவிற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். மேலும், 3 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஏறத்தாழ 31 ஆண்டுகள் கழித்து பாரா படுகொலை சம்பவத்தில் கொல்லப்பட்ட 35 பேரின் குடும்பங்களுக்கு நீதி கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக கிரானி யாதவின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பீகார் மக்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு டிஜிபி சைலேந்திர பாபு மறுப்பு!!