பீட்: மகாராஷ்டிரா மாநிலம் பீட் நகரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் விவசாய திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. 180 அங்காடிகள் விவசாய திருவிழாவில் திறக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் பயன்படுத்தும் விவசாயம் சார்ந்த உபகரணங்கள், விளைச்சல் பொருடகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன.
இதில் ஒரு அங்காடி மட்டும் திருவிழாவுக்கு வந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. கர்நாடகாவைச் சேர்ந்த கஜேந்திர ரெடா என்ற எருமை மாடு தான் அது. சினிமா காட்சியில் வருவது போல் சிறப்பு அலங்காரத்துடன் ஜொலித்த எருமையுடன் சுற்றுலா பயணிகள், விழாவுக்கு வந்த பொது மக்கள் என அனைவரும் செல்பி மற்றும் புகைப்படம் எடுக்க முண்டியடித்துக் கொண்டனர்.
இத்தனை பரபரப்பு ஏன் இந்த மாட்டிற்கு என கேட்டால், அதன் உரிமையாளர் கொடுக்கும் விளக்கம் கேட்போரை கிறங்கடிக்கச் செய்கிறது. கர்நாடாக மாநிலம் பெலகாம் பகுதியைச் சேர்ந்த கஜேந்திர ரெடா, தன் ஒருநாள் உணவாக 15 லிட்டர் பால், 3 கிலோ ஆப்பிள், கரும்பு, புற்கள் என மற்ற மாடுகள் போல் இல்லாமல் குறிப்பிட்ட உணவுகளை மட்டுமே சாப்பிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிய வகையைச் சேர்ந்த கஜேந்திர ரெடாவை பஞ்சாப் சென்று வாங்கியதாகவும், 15ஆண்டுகளாக பராமரித்து வருவதாகவும் அதன் வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஒன்றரை டன் எடை கொண்ட கஜேந்திராவுக்கு டிமாண்ட் அதிகம் என்றும், ஏறத்தாழ ஒன்றரை கோடி ரூபாய் வரை விலைக்கு கேட்பதாகவும் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
குடும்பத்தில் ஒருவர் போல் வளர்ந்து விட்டதால் விற்க மனமில்லாததாலும், வீட்டில் 50க்கும் மேற்பட்ட எருமை மாடுகளை வளர்த்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வருவதால் கஜேந்திரா விற்கும் அவசியம் ஏற்படவில்லை என்றும் உரிமையாளர்கள் கூறினர். கண்கவர் அலங்காரத்துடன் ஊர்வலம் வந்த கஜேந்திராவுடன் பார்வையாளர்கள் ஆர்வமாக போட்டோ எடுத்துக் கொண்டனர்.
இதையும் படிங்க: போலீஸ் எனக் கூறி 17 வயது மாணவி வன்கொடுமை.. வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்!