சென்னை: இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், சீனா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி20 அமைப்பின் நடப்பாண்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டு உள்ளது. இந்தியா தலைமையிலான ஜி20 மாநாடு வரும் செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது.
கல்வி, நிதி, பொருளாதாரம், உணவு, எரிபொருள், சுற்றுச்சூழல் மேம்பாடு, பருவநிலை மாற்றம், பன்னாட்டு நல்லுறவு, எரிசக்தி பாதுகாப்பு, உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் இந்த ஜி20 பிரதிநிதி மாநாடு நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் புதுச்சேரியில் ஜி20 அறிவியல் மாநாடு, கோவை குனியாமுத்தூரில் ஜி20 இளம் தூதுவர் மாநாடு நடைபெற்றது.
சென்னையில் கல்வி தொடர்பான மாநாடு கடந்த ஜனவரி 31, பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் நடந்தது. மேலும் நிதி கட்டமைப்பு மாநாடு நாட்டின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது நிதி கட்டமைப்பு தொடர்பான மாநாடு சென்னையில் இன்றும், நாளையும் நடக்கிறது.
சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் இந்த மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் சென்னை வந்துள்ளனர். இந்த மாநாட்டை மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன், இங்கிலாந்து நிதித்துறையின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிளாரி லொம்பார்டெலி ஆகியோர் தலைமை தாங்கி நடத்துகின்றனர்.
முன்னதாக நிதி தொடர்பான கட்டமைப்பு செயற்குழு கூட்டம் (Second Framework Working Group Meeting) குறித்து தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கூறுகையில், "நிதி தொடர்பான முதல் செயற்குழுக் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் சென்னையில் இன்று (மார்ச் 24) துவங்க உள்ளது.
இந்த கூட்டத்தில் விலைவாசி உயர்வு, எரிசக்தி சார்ந்த பொருட்கள் பற்றாக்குறை, தட்பவெட்ப நிலை மற்றும் பருவநிலை மாற்றம் மூலம் வர கூடிய பொருளாதார தாக்கம் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது. பொருளாதாரம் சம்பந்தபட்ட வரன்முறைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தகவல் மற்றும் அனுபவ பரிமாற்றத்திற்கு மட்டுமே இந்த ஆலோசனைகள் நடைபெற உள்ளன.
உலக வங்கியின் மாநாட்டின் போது சர்வதேச நிதித்துறை அமைச்சர்கள் சந்திப்பார்கள். அப்போது சில கருத்துகளை முன்வைக்க இந்த மாநாடு உதவியாக இருக்கும். மேலும் பசுமை வாயுக்கள், சுற்றுப்புற சூழலில் தாக்கத்தை குறைக்க எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளோம். உணவுப் பொருட்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு அதிகமாகி வருகிறது. இதனைப் பிற நாடுகள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்து, அதுகுறித்து ஆலோசிக்க உள்ளோம்.
ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுடன், சூரிய சக்தி ஆற்றலை அதிகரிக்கப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. உணவு, ஆற்றல் பாதுகாப்பு, வானிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. சிறு, குறு தொழில்களின் நீடித்த வளர்ச்சி குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரயிலில் 20 கிலோ வெடிமருந்து பறிமுதல் - ரயில், ரயில் நிலையத்தை தகர்க்க சதித் திட்டமா?