டெல்லி: இந்திய தலைநகர் டெல்லியில் G20 மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், சர்வதேச அமைப்புகளின் குழு அனைத்து அரசுகளுக்கு இடையேயான மன்றம் மற்றும் அனைத்து தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அதன்படி, ஐநா-வின் நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்து அவசர நடவடிக்கைள் எடுக்குமாறு இக்கடிதத்தில் தெரிவித்துள்ளது.
சர்வதேச அமைப்புகளின் குழு அனுப்பிய கடிதத்தில் தீவிர வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதனைக் கட்டுப்படுத்த G20 தலைவர்களின் மாநாட்டிற்கு முன்னதாக அவசர நடவடிக்கை வேண்டும் என கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில் குளோபல் சிட்டிசன் துணைத் தலைவர் ஃபிரைடெரிக் ரோடர், ONE பிரச்சாரத்தின் கொள்கை இயக்குநர் எமி டாட், நிர்வாக இயக்குநரும், பாண்டிமிக் ஆக்ஷன் நெட்வொர்க்கின் இணை நிறுவனருமான எலோயிஸ் டோட், சுகாதாரமான பொருளாதாரத்திற்கான இணை இயக்குநர் E3G ரோனன் பால்மர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
சர்வதேச அமைப்புகளின் குழு செப்டம்பர் 5ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில், காலநிலை மாற்றம், கடன் சுமைகள், தொற்றுநோய் அச்சுறுத்தல்கள் மற்றும் அதிகரித்து வரும் உணவுத் தட்டுப்பாடுகள் என மக்கள் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. உலகம் பல நெருக்கடியான நிலையில் இருப்பதால், இதனை சரிசெய்யும் முதல் மன்றமாக கருதி G20 தலைவர்களுக்கு இக்கடிதம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SDGs 2030 என்பது 2016 முதல் 2030 என 15 ஆண்டிற்குள் 169 குறிப்பிட்ட இலக்குகளுடன் கூடிய 17 பன்னாட்டு வளர்ச்சிக்கான குறிக்கோள் கொண்ட தீர்மானம் ஆகும். ஏழ்மையின்மை, பசியின்மை, தரமான கல்வி, நல்ல ஆரோக்கியம் என 17 முக்கிய குறிக்கோள்கைளைக் கொண்டு உள்ளது.
G20 மேம்பாட்டு அமைச்சர்களின் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, SDGs 2030-ஐ பின்வாங்காமல் இருக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும், இதனை அடைவதற்குத் தேவையான செயல்திட்டங்களை உலக நாடுகள் எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
மேலும், SDGs 2030-ஐ நிறைவேற்றுவதற்காக முதலீட்டை அதிகரிக்க வேண்டும், பல நாடுகள் எதிர்கொள்ளும் கடன் அபாயத்தை நிவர்த்தி செய்வதற்கான தீர்வுகளை காண வேண்டும் மற்றும் பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவை முக்கியமானது என கூறினார்.
உலகம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக, காலநிலை மாற்றம் வறுமை சமத்துவமின்னை மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு ஆகியவற்றை சரி செய்ய SDGs ஒரு புதிய நம்பிக்கையாக உள்ளது. அனைவருக்குமான சமமான மற்றும் நிலையான எதிர்காலத்திற்கு விரிவான பாதையாக அமைகிறது. எனவே, நடைபெறும் G20 மாநாட்டில் கலந்து கொள்ளும் நாடுகள் கூட்டு முயற்சி எடுக்க வேண்டும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெறும் G20 மாநாட்டில் SDGs தொடர்பான முடிவுகள் எடுக்க இதுவரை இல்லாத வாய்ப்பு கிடைத்துள்ளது. அனைத்து நாட்டின் முக்கியத் தலைவர்கள் சந்திக்கும் இந்த நிலையில், இது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என அனைத்து சர்வதேச குழுக்கள் அனுப்பிய கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: G20 Summit: ‘ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ளாத அதிபர்களால் எந்த பாதிப்பும் இல்லை’ - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்!