லடாக்கில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கும் குறைவாக சென்றுள்ளது. இதனால் அங்குள்ள நீர்நிலைகள் உறைந்து போயுள்ளன. தற்போதைய குளிர்நிலை இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு நீட்டிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஐஸ் ஹாக்கி, ஐஸ் ஸ்கேட்டிங் போன்ற விளையாட்டுகளுக்கான பயிற்சியில் இளம் தடகள வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து தேசிய விளையாட்டு வீரர் ரிஞ்சன் டோல்மா கூறுகையில், ”ஐஸ் ஹாக்கி விளையாட்டுக்கான பயிற்சியில் மீண்டும் ஈடுபட்டது மகிழ்ச்சியளிக்கிறது. நாங்கள் கவனமாக உள்ளோம். கரோனா காரணமாக தகுந்த இடைவெளியைக் கடைபிடித்து வீரர்கள் விளையாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த இரண்டு மாதங்களுக்காக தான் நாங்கள் காத்துக் கொண்டிருப்போம். செயற்கையாக அல்லாமல் இது போன்ற இயற்கையான உறைந்த பனியில் பயிற்சியில் ஈடுபடுவதால் நாங்கள் பயன் பெறுவோம்" என்றார்.
இதுகுறித்து இளம் மாணவி ஸ்டான்சின் செக்கர் கூறுகையில், "குளிர்காலத்தில் தான் ஐஸ் ஹாக்கி விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வெப்பநிலையில் நீர்நிலை உறைந்துள்ளதால் பயிற்சியில் ஈடுபடுகிறோம்" என்றார். கடந்த பத்தாண்டுகளில் லடாக்கில் ஐஸ் ஹாக்கி மிகவும் புகழ்பெற்ற விளையாட்டாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.