டெல்லி : 44 பில்லியன் டாலர் பணம் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அதன் உரிமையாளரும் உலக பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் மேற்கொண்டு வருகிறார். முன் அறவிப்பின்றி ஊழியர்கள் பணி நீக்கம், ப்ளூ டிக்கெட் சந்தா என எலான் மஸ்க் கையில் எடுத்த அனைத்து விவகாரங்களும் சர்ச்சையில் முடிந்தன.
ட்விட்டர் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை குறிக்கும் ப்ளூ டிக்கிற்கு மாதந்தோறும் சந்தா செலுத்தாவிட்டால் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அந்த வசதி துண்டிக்கப்படும் என எலான் மஸ்க் முதன் முதலில் அறிவித்தார். இருப்பினும் ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பின்னரும் பலர் அந்த வசதியை பலர் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் சந்தா செலுத்தாவிட்டால் ப்ளூ டிக் வசதி துண்டிக்கப்படும் என தன் ட்விட்டர் பக்கத்தில் எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார். மேலும் ப்ளூ டிக் சந்தாதாரர்கள் மட்டுமே பெறக் கூடிய வகையிலான பல்வேறு வசதிகளை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தினார்.
எலான் மஸ்க் விதித்த கெடு நிறைவடைந்த நிலையில், பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு பயனர்கள் தங்களது மாத சந்தாவை இன்னும் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இன்று (ஏப். 21) வியாழக்கிழமை மாத சந்தா செலுத்தாத ட்விட்டர் பயனர்களின் ப்ளூ டிக் அங்கீகாரம் நீக்கப்படும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்து இருந்தது. ட்விட்டர் நிறுவனம் ஏறத்தாழ 3 லட்சம் ப்ளூ டிக் சந்தாதாரர்களை கொண்டு உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் பத்திரிக்கையாளர்கள், விளையாட்டு மற்றும் தடகள வீரர், வீராங்கனைகள், சினிமா மற்றும் பொதுத் துறை சார்ந்த பிரபலங்கள் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து மாத சந்தா செலுத்தாத சந்தாதாரர்களின் கணக்குகளில் இருந்து ப்ளூ டிக் வசதியை நீக்கும் பணியில் ட்விட்டர் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை, உலகம் முதல் உள்ளூர் அரசியல் தலைவர்கள் வரை என சந்தா செலுத்தாத பயனர்களின் ப்ளு டிக் வசதியை பாரபட்சமின்றி ட்விட்டர் நிறுவனம் தூக்கி உள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகளில் இருந்து ப்ளு டிக் அகற்றப்பட்டு உள்ளது.
பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், தமிழக நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சிம்பு, விஜய்சேதுபதி உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகளில் இருந்து ப்ளு டிக்குகள் நீக்கப்பட்டு உள்ளன. அதேபோல் மலையாள நடிகர் மோகன்லால், மம்முட்டி, அவரது மகன் துல்கர் சல்மான், தெலங்கு நடிகர்கள் சீரஞ்சீவி, அவரது மகன் ராம்சரண், அல்லு அர்ஜூன் ஆகியோரின் ப்ளு டிக்குகளும் அகற்றப்பட்டு உள்ளன.
விளையாட்டு வீரர்கள் மகேந்திர சிங் டோனி, விராட் கோலி, அவரது மனைவி அனுஷ்கா சர்மா, தெண்டுல்கர், கே.எல்.ராகுல், ரோகித் சர்மா உள்ளிட்டோரின் ப்ளூ டிக்குகள் அகற்றப்பட்டு உள்ளன. செல்போன் செயலியில் மாத சந்தாவான 900 ரூபாய் கட்டணம் செலுத்தாததால் ப்ளூடிக் நீக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தனிப்பட்ட கணக்கில் இருந்து மட்டுமே ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருடைய அலுவலக கணக்கில் கிரே கலர் டிக் இருக்கிறது. அது போல் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரின் தனிப்பட்ட கணக்கில் இருந்து ப்ளூ டிக்குகள் நீக்கப்பட்டு உள்ளன.
அதேநேரம் நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா, ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகளில் இருந்து ப்ளு டிக்குகள் நீக்கப்படாதது குறிப்பிடத்தக்கது. தெலங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் ரசிகர்கள் பக்கத்திற்கு ப்ளூ டிக் உள்ள நிலையில், அவரது அதிகாரப்பூர்வ கணக்கிற்கு ப்ளு டிக் நீக்கப்பட்டு இருப்பது வேடிக்கையாக உள்ளது.
அதேபோல் தெலங்கானா முதலமைச்சர் கேசிஆரின் கட்சி சார்ந்த ட்விட்டர் பக்கத்திற்கு ப்ளு டிக் உள்ள நிலையில், மாநில அரசின் அலுவலக ட்விட்டர் பக்கத்திற்கு ப்ளூ டிக் நீக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : Twitter : ட்விட்டர் ப்ளூ டிக் அகற்றம் - எலான் மஸ்க் அதிரடி!