டெல்லி: தலைநகர் டெல்லியில் உலக தலைவர்கள், நிதித்துறை வல்லுநர்கள் உள்ளிட்டோரின் ஜி 20, 18-வது உச்சி மாநாடு மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது. சர்வதேச அளவில் இந்தியாவின் பெருமை ஓங்கி ஒலிக்க செய்த இந்த நிகழ்வில் ஏராளமான நினைவுகூரும் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அந்த வகையில் உலக தலைவர்களுக்கு வழங்கப்பட்ட விருந்தோம்பல் மற்றும் அதை பரிமாறுவதற்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி முலாம் பூசப்பட்ட மேஜை பாத்திரங்கள் குறித்து கேள்விப்பட்டோம்.
அதையெல்லாம் தாண்டி ஜி 20 உச்சி மாநாட்டிற்கு வருகை தந்த உலக தலைவர்கள், அவர்களின் துணைவியர்கள் உள்ளிட்ட பலருக்கு இந்திய நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இதை பிரதமர் மோடி தனது கையால் அனைவருக்கும் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
பிரேசில்: அந்த வகையில், பிரேசில் ஜனாதிபதி 'லூலா டா சில்வா'-வின் துணைவி 'ரோசங்கலா டா சில்வா'-வுக்கு பேப்பியர் மச்சே பெட்டியில், காஷ்மீரின் கலைவடிவத்தை பிரதிபலிக்கும் பஷ்மினா ஸ்டோலை பரிசாக வழங்கியுள்ளார். காஷ்மீரின் பஷ்மினா அரச குடும்பத்தின் அடையாளமாக விங்கிய இந்த ஸ்டோலை கைவினை கலைஞர்கள் மிக நேர்த்தியாக வடிவமைத்துள்ளனர்.
இந்தோனேசியா: இந்தோனேசிய அதிபர் 'ஜோகோ விடோடோ'-வின் மனைவி 'இரியானா ஜோகோ விடோடோ'-வுக்கு பிரதமர் நரேந்திர மோடி 'கடம்ப மரப்பெட்டி'-யில் அஸ்ஸாம் மாநிலத்தின் ஆடை நெய்தல் பாரம்பரியத்தை போற்றும் 'அஸ்ஸாம் ஸ்டோலை' பரிசாக வழங்கியுள்ளார்.
அசாமிய மக்களின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உள்ளடக்கிய நெசவு மரபுகளின் கை வண்ணத்தை கலைஞர்கள் அந்த ஸ்டோலில் காண்பித்துள்ளனர். அதேபோல கடம்ப மரம் புராணங்களில் மங்களகரமான ஒரு மரமாக கருதப்படுகிறது. இந்த கடம்ப மரத்தை கொண்டு கர்நாடகாவை சேர்ந்த கைவினை கலைஞர்கள் அந்த பெட்டியை உருவாக்கியுள்ளனர்.
ஜப்பான்: அவரை தொடர்ந்து, ஜப்பானிய பிரதமர் 'ஃபுமியோ கிஷிடா'-வின் துணைவியார் 'யூகோ கிஷிடா'-விற்கு கடம்ப மரப்பெட்டியில் வைத்து காஞ்சிபுரம் பட்டு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பட்டு என்றால் அது இந்தியா மட்டும் இன்றி உலக அளவில் பெண்களால் விரும்பப்படும் ஒரு பட்டு. இந்த பட்டுப்புடவையை தமிழகத்தை சேர்ந்த கைவினை கலைஞர்கள் தங்கள் நேர்த்தியான கைவண்ணத்தால் வடிவமைத்துள்ளனர். இந்த கடம்ப மரப்பெட்டியை கேரளாவை சேர்ந்த கைவினை கலைஞர்கள் வடிவமைத்துள்ளனர்.
இங்கிலாந்து: அதேபோல, இங்கிலாந்து பிரதமர் 'ரிஷி சுனக்'-கின் மனைவி 'அக்ஷதா மூர்த்தி'-க்கு பனாரசி ஸ்டோலை பிரதமர் மோடி பரிசாக வழங்கியுள்ளார். பனாரஸ் வடிவமைப்பும், அதை உடுத்தும் நபரும் ராஜ கம்பீரத்தை பெறுவார்கள் என ஆடை வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர். மிக நுணுக்கமான கை வேலைப்பாடுகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பனாரசி ஸ்டோலை பிரதமர் மோடி 'அக்ஷதா மூர்த்தி'-க்கு கடம்ப மரப்பெட்டியில் வழங்கி கவுரவித்தார்.
மொரீஷியஸ்: அவரை தொடர்ந்து, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத்தின் மனைவி கோபிதா ராம்தானிக்கு குஜராத் கைவினைக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட தேக்கு மரப்பெட்டியில் 'இக்கட் ஸ்டோலை' பரிசாக வழங்கினார். ஒடிசாவின் கைவினை கலைஞர்களால் இந்த இக்கட் ஸ்டோல் உருவாக்கப்பட்டுள்ளது. இது காலத்தால் அழியாத ஒடிசாவின் பாரம்பரியத்தை தங்கி நிற்கிறது.
அர்ஜென்டினா: அதேபோல, அர்ஜென்டினா ஜனாதிபதி ஆல்பர்டோ பெர்னாண்டஸின் மனைவி மார்செலா லு செட்டிக்கு, கருங்காலி ஜாலி பெட்டியில் பனாரசி பட்டு ஸ்டோலை வழங்கி கவுரவித்துள்ளார் பிரதமர் மோடி. வாரணாசி கலைவடிவத்தை தாங்கி பிடிக்கும் வர்ணனைகள் அந்த பட்டில் இடம் பெற்றுள்ளன.
இது தவிர ஜி 20 மாநாட்டிற்கு வருகை தந்த அத்தனை உலக தலைவர்களுக்கும் காஷ்மீரின் உலக தரம் வாய்ந்த குங்குமப்பூ, உத்தரபிரதேசத்தின் இட்டார் வாசனை திரவம், நீலகிரி தேயிலை, டார்ஜீலிங் தேயிலை, அரக்கு காபி, சுந்தரவனம் மல்டிஃப்ளோரா மாங்குரோவ் தேன் உள்ளிட்ட பல அரிய பொருட்களை பரிசு தொகுப்பாக வழங்கி கவுரவித்துள்ளார் பிரதமர் மோடி.
இதையும் படிங்க: AI துறையில் பின்தங்கியுள்ள இந்தியா - வளர்ச்சிபெற வேண்டியதன் அவசியம் என்ன?