ஐந்தாவது ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிக் கப்பலான வாகிர் இந்தியக் கடற்படையால் இன்று செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. இதற்கு வாழ்த்து தெரிவித்துப் பேசியுள்ள இந்தியாவுக்கான ஃபிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனய்ன், “மும்பை மசாகன் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட ஐந்தாவது ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிக் கப்பல் இன்று இந்தியக் கடற்படையுடன் இணைக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்தியக் கடற்படைக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கப்பலின் டிசைன் ஃபிரான்ஸால் வடிவமைக்கப்பட்டு இந்தியாவால் கட்டப்பட்டது. இது பாதுகாப்புத் துறையில் ஃபிரான்ஸ்-இந்திய உறவின் மற்றுமொரு மைல்கல்லாக இருக்கும்” என்றார்.
முன்னதாக இன்று காலை பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கின் மனைவி விஜயா கப்பலை இந்தியக் கடற்படையுடன் இணைக்கும் நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தார். இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீபத் நாயக் தலைமை தாங்கினார்.
நீருக்கடியில் வசிக்கும் அபாயகரமான மீன் இனமான வாகிரின் பெயர் இக்கப்பலுக்குச் சூட்டப்பட்டுள்ளது. இக்கப்பல் கடலுக்கு அடியிலிருந்தும் கடலின் மேற்பரப்பிலும் நின்று போரிடும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாகிர் சுமார் 50 நாள்கள் வரை கடலுக்கு அடியில் இருக்கும் திறன் கொண்ட வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எஸ்-400 ஏவுகணை: விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கிறது ரஷ்யா!