ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில், போலி வர்த்தக செயலி மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது.
டெகுலா முக்திராஜ் என்ற நபர், 'மல்டிஜெட் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் போலி வர்த்தக செயலியை உருவாக்கி, அதில், தங்கம், நிலக்கரி, எரிவாயு உள்ளிட்டவை தொடர்பான வர்த்தகங்கள் நடப்பது போல செட் செய்து வைத்தார்.
தங்களிடம் ஒரு லட்சம் ரூபாயை முதலீடு செய்தால், 8 மாதங்களுக்குள் 4 கோடி ரூபாய் கிடைக்கும் என விளம்பரம் செய்தார். இதை நம்பி பொதுமக்கள் சிலர் முதலீடு செய்தனர். ஆரம்பத்தில் சிலருக்கு குறைந்த அளவில் லாபங்களை வழங்கியுள்ளார். இதனால் ஏராளமானோர் அதிகளவில் முதலீடு செய்யத்தொடங்கினர். பின்னர், முதலீடு செய்த பணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.
முக்திராஜ் ஹைதராபாத்தில் உள்ள சிறை அலுவலர் ஒருவரின் உதவியுடன் இந்த மோசடியில் ஈடுபட்டதை ஈடிவி பாரத் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
செயலியின் பணப் பரிவர்த்தனைகளை சோதனை செய்தபோது, முக்திராஜ் 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்தது தெரியவந்தது. மல்டிஜெட் பிரைவேட் லிமிடெட் பெயரில் இருந்த வங்கிக் கணக்கை சோதித்தபோது, அதில் 12 லட்சம் ரூபாய் மட்டுமே இருந்தது தெரியவந்துள்ளது. அந்த கணக்கில் இருந்த மீதி பணம் ஒரு வாரத்திற்கு முன்பு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வளவு பெரிய தொகை எப்படி மாற்றப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
முக்திராஜ் குடும்பத்தினர் மற்றும் மல்டிஜெட் நிறுவனத்தில் பணியாற்றிய சிலரின் வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்படும் என்றும், மக்களிடம் வசூலித்த பணத்தை எங்கு மறைத்து வைத்தனர் என்பது குறித்தும் விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில், போலி செயலியை உருவாக்கிய நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ.1 லட்சத்திற்கு 8 மாதத்தில் ரூ.4 கோடி.. பிரபல நிறுவனம் பலே மோசடி!