பரேலி: உத்தரப்பிரதேச மாநிலத்தின் மாநில தேர்வு வாரியத்தின்கீழ் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் (UP Board High School and Intermediate Examination) இன்று (ஏப்ரல் 25) வெளியானது. இதில், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித் தேர்வராக தேர்வெழுதிய முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் மிஷ்ரா என்ற பப்பு பாரடோல் தேர்ச்சி பெற்றுள்ளார்.
மாநிலத்தின் பரேலி மாவட்டத்தில் உள்ள பித்ரி சாயின்பூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினரான ராஜேஷ் மிஷ்ரா, தான் தேர்வெழுதியதில் 3 பாடங்களில் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். இதனால், விடைத்தாள் நகலைப் பெற்று, சரிபார்க்க விண்ணப்பிக்க உள்ளதாகவும் பப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, முன்னாள் பாஜக எம்எல்ஏ பப்பு பாரடோல் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி அடைந்ததை அறிந்த அவரது ஆதரவாளர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். மேலும், பப்பு பாரடோவுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த பப்பு பாரடோல், “12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தற்போது தேர்ச்சி அடைந்துள்ளேன். இதனையடுத்து சட்டம் (LLB) படிக்க இருக்கிறேன்.
இதன் மூலம் ஏழைகளுக்கு உதவி செய்வேன். கல்விக்கு அப்பால், மக்களின் குறைகளைக் கேட்டறிவேன். இந்த வெற்றிக்காக நான் பல மடங்கு அளவிற்கு கடினமாக உழைத்துள்ளேன்” எனக் கூறியுள்ளார். அதேபோல், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பப்பு பாரடோலுக்கு பாஜக பிரமுகர்கள் உள்பட பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “உத்தரப்பிரதேச மாநிலத் தேர்வுகளில் வெற்றி அடைந்த அனைவருக்கும் வாழ்த்துகள். தேர்வில் தேர்ச்சி அடைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் மகிழ்ச்சிக்கு இடமில்லை. இந்த அரசு மற்றும் அதன் நிர்வாகத்தால், தற்போது முறைகேடுகள் இல்லாத தேர்வு நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக அதிகளவிலான முறைகேடுகள் மாநிலத் தேர்வுகளில் நடைபெற்றுள்ளது” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Karnataka Election 2023 : நட்சத்திர வேட்பாளர்கள் மீதான வழக்கு பட்டியல் வெளியீடு!