குவாலியர்: இந்தியாவில் மீண்டும் சிவிங்கிப் புலிகள் இனத்தைக் கொண்டு வரும் விதமாக கடந்த ஆண்டு நமீபியாவில் இருந்து 5 பெண், 3 ஆண் சிவிங்கிப் புலிகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. மேலும் கடந்த பிப்ரவரி மாதம், 18ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் இருந்து விமானம் மூலம் மேலும் 12 சிவிங்கிப் புலிகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன.
இந்திய காடுகளில் மீண்டும் சிவிங்கிப் புலிகளை பரப்பும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் தொடர்ச்சியாக சிவிங்கிப் புலிகள் உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவிங்கிப் புலிகள் உயிரிழப்பிற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், ரேடியோ காலரால் ஏற்பட்ட ஒவ்வாமையால் தொற்றுக்கு உள்ளாகி சிவிங்கிப் புலிகள் உயிரிழந்ததாக சமீபத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அதிகாரிகள் பொய் கூறுவதாகவும், அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் சிவிங்கிப் புலிகள் உயிரிழப்பதாகவும் முன்னாள் ஓட்டுநர் ஒருவர் கூறியுள்ளார். சிவிங்கிப் புலிகள் பசி மற்றும் அசுத்தமான இறைச்சியை உண்பதால் உயிரிழந்துள்ளதாக அவர் கூறியுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள போஹ்ரியில் வசிக்கும் சுனில் ஓஜா, நான்கு மாதங்களுக்கு முன்பு குனோ தேசிய பூங்காவின் பால்பூர் மேற்கு பகுதி சீட்டா டிராக்கிங் டீம் வாகனத்தின் ஓட்டுநராகப் பணிபுரிந்ததாகக் கூறினார். மேலும், வனத்துறை அதிகாரிகள் தன்னை பணியில் இருந்து நீக்கி விட்டதாக ஓஜா கூறினார்.
குனோ தேசிய பூங்காவில் உள்ள சிவிங்கிப் புலிகள் அதிகாரிகள் கூறியதுபோல் கழுத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாக இறக்கவில்லை என்று ஓஜா கூறினார். சிவிங்கிப் புலிகளுக்கு சிறிதளவே உணவு கொடுக்கப்பட்டதாகவும், அதுவும் அழுகிப் போன இறைச்சியை உண்ண வழங்கியதாகவும் அவர் கூறினார்.
சிவிங்கிப் புலிகளுக்கு உணவளிப்பதற்காக குனோ தேசிய பூங்காவில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 200 கிலோ இறைச்சி, அதிகாரிகளின் தவறான கையாளுகையால் அழுகியதாக ஓஜா கூறினார். குனோ தேசிய பூங்காவில் உள்ள அதிகாரிகள் அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
அதிகாரிகள் சமீபத்தில் குனோ தேசிய பூங்காவில் இரண்டு சிவிங்கிப் புலிகள் இறந்ததற்கு செப்டிசீமியா (பாக்டீரியாவால் ரத்தம் விஷமாவது) காரணம், அவற்றின் கழுத்தில் ரேடியோ காலர்களைப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட தொற்று காரணமாக இருக்கலாம் என தெரிவித்திருந்தனர். அதேநேரம், ஓஜாவின் குற்றச்சாட்டு குறித்து குனோ தேசிய பூங்காவின் டிஎஃப்ஓ பிரகாஷ் வர்மாவிடம் ஈடிவி பாரத் பேசியபோது, தேசிய பூங்காவில் சிவிங்கிப் புலிகள் இறந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.
இதையும் படிங்க: Manipur violence: "எங்கு செல்வது எனத் தெரியவில்லை": கதறும் மணிப்பூர் கிராம மக்கள்!