புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், “பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு எதிர்கட்சித் தலைவர்களை திட்டமிட்டு பழிவாங்கும் செயலில் இறங்கி உள்ளது. அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை, சிபிஐ அமைப்புகளைப் பயன்படுத்தி எதிர்கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் வீடுகளில் சோதனை செய்வது, பொய் வழக்குப் போடுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும், எதிர்கட்சியான ஆட்சியில் உள்ள தமிழகம், மேற்கு வங்கம், டெல்லி, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பொய் வழக்கு போடப்படுகிறது. திமுக எம்.பி ஜெகத்ரட்சகன், கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ வீடு, மேற்கு வங்கத்தில் அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களில், பாஜகவினர் மீது ஊழல் குறித்து எந்த வழக்கும் பதிவு செய்வதில்லை. அமலாக்கத்துறை எதிர்கட்சித் தலைவர்கள் மீது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவு செய்து உள்ளது. இதில் 6 வழக்கு மட்டுமே முடிக்கப்பட்டு உள்ளது. இது எதிர்கட்சிகளின் மீதான பழிவாங்கும் நடவடிக்கை.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. பீகாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ளது. இந்தியா முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ராகுல்காந்தி கோரிக்கை வைத்து உள்ளார். இந்த கணக்கெடுப்பு நடத்தினால், மேல்சாதி மக்களுக்குச் செல்லும் சலுகைகள் தடுக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “புதுச்சேரியிலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். சென்டாக்கில் தொடர்ந்து குளறுபடி நடக்கிறது. என்ஆர்ஐ இடஒதுக்கீட்டில் விதிமுறையை மாற்றி இடங்களை அபகரிக்க முயற்சிக்கின்றனர். இதற்கு செயலாளர் ஒத்துக் கொள்ளாததால் முடிவை கைவிட்டு உள்ளனர்.
பல் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த மாணவர் சுரேந்தருக்கு 2வது கட்ட கலந்தாய்வில் எம்பிபிஎஸ் சீட் ஒதுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், சீட் ஒதுக்கவில்லை என்பதால் புகார் தெரிவித்து உள்ளார். இதனால் கவுன்சிலிங் ரத்து செய்யப்பட்டு உள்ளது. புதுச்சேரி அரசு உயர்த்திய மின் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும்.
பதுச்சேரியில் போலி பத்திரங்கள் தயாரிப்பது, நிலங்களை அபகரிப்பது, தனியார் சொத்துகளை வேறு நபருக்கு பட்டா போடுவது, கோயில் நிலங்களை அபகரிப்பது, அரசு புறம்போக்கு நிலங்களுக்கு பத்திரப்பதிவு செய்வது என பத்திரப்பதிவுத்துறை தொடர்ந்து ஊழலில் ஈடுபட்டு உள்ளது.
சிபிஐ மூலம் காரைக்கால் சார்பதிவாளர் கைது செய்யப்பட்டார். வாக்குமூலத்தில் யாருக்கு லஞ்சம் செல்கிறது என தெரிவித்து உள்ளார். புதுச்சேரி காமாட்சி அம்மன் கோயில் நில வழக்கில் சார்பதிவாளர், பத்திரப்பதிவுத்துறை செயலாளர் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் நிலத்தை மீண்டும் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. இதை வலியுறுத்தி இந்தியா (I.N.D.I.A) கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
புதுச்சேரியில் பல போலி பத்திரங்கள் தயாரிக்கப்படுகிறது. 32 போலி பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு, ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள பத்திரங்களை எடுத்துவிட்டு, போலி பத்திரத்தை வைத்து பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் கபளீகரம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு அதிகாரிகள், ஊழியர்கள் துணையாக உள்ளனர். 29 பத்திரம் உழவர்கரை, 3 பத்திரம் பாகூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதியப்பட்டு உள்ளது.
பதிவுத்துறைக்கு தொடர்பு இல்லாதவர்கள் உள்ளே நுழைந்து, அதிகாரிகள் ஒத்துழைப்போடு பத்திரங்களை மாற்றி உள்ளனர். ஒரு மாதம் முன்பு இதை மாற்றியதற்கான ஆதாரங்கள் உள்ளது. இது குறித்து சப் கலெக்டர் விசாரணை நடத்தி உள்ளார். இதில் அரசியல்வாதிகளின் பின்னணி உள்ளது. ஒரு பத்திரத்திற்கு ஒரு எண்தான் தருவார்கள். ஆனால் 2 பத்திரத்திற்கு ஒரே எண் அளிக்கப்பட்டு உள்ளது.
வில்லியனூர் சார்பதிவாளர் கார்த்திகேயன் போலி பத்திரம் பதியமாட்டேன் எனக் கூறியதால், ஒரு கும்பல் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து உள்ளார். தற்போது திருக்கனூர் சார்பதிவாளர் பாஸ்கர், வில்லியனூருக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டு பத்திரம் பதியப்பட்டு வருகிறது.
ஒட்டுமொத்தமாக பத்திரப்பதிவு ஊழலுக்கு என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சிதான் காரணம். பொதுமக்களின் பத்திரத்திற்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. யார் சொத்தை வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் எழுதிக் கொடுக்கும் நிலை உள்ளது. பத்திரப்பதிவுத் துறையில் இமாலய ஊழல் நடக்கிறது.
நில அபகரிப்பு கூட்டம் அரசியல்வாதிகளின் துணையோடு நடைபெறுகிறது. பத்திரப்பதிவுக்கு முதலமைச்சரும் உடந்தையாக உள்ளார். புதுச்சேரியில் உள்ள மக்களின் சொத்துக்களுக்கு பாதுகாப்பு இல்லாத தரம் கெட்ட என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. போலி உயில், பத்திரப்பதிவு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில், இதை முன்னிறுத்தி பலகட்ட போராட்டங்கள் நடத்தப்படும்” என தெரிவித்தார்.
முன்னதாக, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வீடியோ ஆதாரம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் ஒருவர் தரையில் அமர்ந்து இன்டெக்ஸ் புத்தகத்தில் ஆவணங்களை மாற்றுவது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு! பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே தீவிரமாகும் போர்!