இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு இரண்டாம் அலை தீவிரமடைந்துவரும் நிலையில், முதல் அலையின்போது ஏற்பட்ட பொது முடக்கம் காரணமாக சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. டிசம்பருக்குப் பின் கோவிட்-19 குறைந்த நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
பூமியின் சொர்க்கம் எனக் கூறப்படும் ஜம்மு காஷ்மீரில் கடந்த மூன்று மாதத்தில் சுற்றுலா பயணிகள் வருகை குறித்து, அம்மாநில சுற்றுலாத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2021ஆண்டு முதல் மூன்று மாதத்தில் மொத்தம் 92 ஆயிரத்து 913 சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர். அதில் 92 ஆயிரத்து 559 பேர் உள்நாட்டுப் பயணிகள், 354 பேர் வெளிநாட்டுப் பயணிகள்.
இதில் பெரும்பாலானோர் மார்ச் மாதத்தில் வந்துள்ளனர். 2020ஆம் ஆண்டில் இதே காலக்கட்டத்தை ஒப்பிடும் போது, இந்தாண்டு சுற்றுலாப் பயணிகள் வருகை சிறப்பான உயர்வைக் கண்டுள்ளது. அதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை 90 விழுக்காடு குறைந்துள்ளது என அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காஷ்மீரின் சுற்றுலாத்துறை மூத்த அலுவலர் ஈடிவி பாரத்திடம் பேசுகையில், காஷ்மீரில் சுற்றுலாத் துறையை ஊக்கப்படுத்த தொடர் முயற்சிகளை அரசு மேற்கொண்டுவருகிறது. கடந்த பிப்ரவரி கேலோ இந்தியா தொடர் காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பொருத்தவரை, கோவிட்-19 காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் உள்ளதால், அவர்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுகிறது.
இதையும் படிங்க: சிவசேனா எம்.எல்.ஏவுக்கு நெருக்கமான தொழிலதிபர் கைது